×

ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.10.25 லட்சம் கோடி மதிப்புக்கு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை

புதுடெல்லி: கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவில் ரூ.10.25 லட்சம் கோடிக்கு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையில் டிஜிட்டல் வழியில் நடைபெற்ற பணப்பரிவர்த்தனை குறித்த ஒரு ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் 2022-ம் ஆண்டின் முதல் 3 மாதங்களில், டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகள், போன்பே, கூகுள் பே உள்ளிட்ட செயலிகள், யுபிஐ பி2எம் (வர்த்தகருக்கு தனிநபர் அனுப்பியது) வழியாக 936 கோடி பரிவர்த்தனைகள் மூலம் ரூ.10.25 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இதில் யுபிஐ பி2எம் பரிவர்த்தனை மட்டும் எண்ணிக்கை அடிப்படையில் 64%, தொகை அடிப்படையில் 50% பங்குடன் முதலிடம் பிடித்துள்ளது.

இதுபோல கிரடிட் கார்டுகள் பரிவர்த்தனை எண்ணிக்கை அடிப்படையில் 7%, தொகை அடிப்படையில் 26% பங்கு வகித்தன. இதன்மூலம் அதிக மதிப்பு கொண்ட பரிவர்த்தனைகளுக்கு கிரடிட் கார்டு பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. டெபிட் கார்டுகள் பரிவர்த்தனை எண்ணிக்கை அடிப்படையில் 10%, தொகை அடிப்படையில் 18% பங்கு வகித்தன. இது கடந்த ஆண்டைவிட குறைவு. யுபிஐ பரிவர்த்தனை அதிகரித்ததே இதற்குக் காரணம் எனத் தெரிகிறது.

நடப்பு 2022-ம் ஆண்டின் முதல் காலாண்டில், யுபிஐ மூலம் மட்டும் 1,455 கோடி பரிவர்த்தனைகள் மூலம் ரூ.26.19 லட்சம் கோடி பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. இது கடந்த 2021-ம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 2 மடங்கு ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : January-March Quarterly, Digital Money Transfer,
× RELATED சீமான் தாக்கல் செய்த வழக்கில், நடிகை...