×

தீவிரவாதிகள் ஊடுருவல் கண்காணிப்பு கன்னியாகுமரியில் சாகர் கவாச் ஆபரேஷன்

கன்னியாகுமரி: மும்பையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தீவிரவாதிகள் கடல் வழியாக  நுழைந்து தாக்குதல் நடத்தினர். அதன்பிறகு இந்திய கடல் பகுதிகளை, கடலோர பாதுகாப்பு படையினர்  தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் ‘சாகர் கவாச் ஆபரேஷன்’ என்ற பெயரில் கடல் பகுதிகளை அதிநவீன படகுகள் மூலம் கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது. இந்தியாவின் தென்முனை மற்றும் கடல் சார்ந்த சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்கவும் ‘சாகர் காவச் ஆபரேஷன்’ ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் கடலோர பாதுகாப்பு குழுமம், மீன்வளத்துறை, இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து இந்த பாதுகாப்பு ஒத்திகையை நடத்தி வருகின்றன. இதில் தமிழகத்தில் இருந்து 100 போலீசார் தீவிரவாதிகள் போன்று மாறுவேடத்தில் கடல் மற்றும் தரை வழியாக இந்திய பகுதிக்குள் நுழைவர். அவர்களை ரோந்து போலீசார் கண்டுபிடிப்பர். இந்த நிலையில் கன்னியாகுமரி கடலில் இன்று கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில், ’சாகர் காவச் ஆபரேஷன்’ மேற்கொள்ளப்பட்டது.

 இதில் கூடங்குளம் முதல் நீரோடி வரையிலான 48 மீனவ கிராமங்களை இணைத்து கடல் பகுதியில் அதிவிரைவு படகுகள் மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த 48 மீனவ கிராமங்களிலும் சந்தேகத்துக்குரிய வகையில் யாராவது நடமாடினால்  உடனடியாக தகவல் தெரிவிக்கும்படியும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். அதுபோல சின்னமுட்டம், மகாதானபுரம், மாதவபுரம், முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம் போன்ற கடலோர சோதனைச்சாவடிகளிலும் போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.


Tags : Kannyakumarii , Terrorist Infiltration Surveillance Sagar Kawach Operation in Kanyakumari
× RELATED சிதம்பரம் கொள்ளிடத்தில்...