கீழ் கோத்தகிரி அருகே கரடி தாக்கியவரை தொட்டில் கட்டி மருத்துவமனை தூக்கிச்சென்ற மக்கள் சாலை வசதி இல்லாததால் அவலம்

குன்னூர்: கீழ் கோத்தகிரி அருகே கரடி தாக்கி படுகாயம் அடைந்தவரை சாலை வசதி இல்லாததால் தொட்டில் கட்டி தூக்கி சென்றனர். நீலகிரியில் இருளர், குறும்பர், பணியர், காட்டு நாயக்கர், தோடர், கோத்தர் உள்ளிட்ட ஆறு வகையான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து  35 கிலோமீட்டர் தொலைவில் கரிக்கையூர், வாகப்பண்ணை, மெட்டுக்கள் உள்ளிட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன.

இங்கு இருளர் பழங்குடியின மக்கள் 600க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் மலை அடிவாரத்தில் இந்த கிராமம் தனித்தீவுபோல காட்சியளிக்கிறது. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் தேன் எடுத்தல், குறுமிளகு விவசாயம் உள்ளிட்ட தொழில்கள் செய்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் வாழும் இந்த மக்கள் சாலை வசதிகள் இல்லாததால் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

சாலை வசதிகள் இல்லாததால் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் மக்களாகவே இவர்கள் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மெட்டுக்கள் அருகே உள்ள குடகூர் கிராமத்தை சேர்ந்த சூணன் என்பவரை கரடி தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால் சாலை வசதிகள் இல்லாததால் அப்பகுதி மக்கள் தொட்டில் கட்டி சுமார் 4 கிலோமீட்டர் தொலைவு வரை அடர்ந்த வனப்பகுதியில் சுமந்து வந்தனர். இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘‘கரிக்கையூர் பகுதியை சுற்றியுள்ள பழங்குடி கிராமங்களான வாகப்பண்ணை, மெட்டுக்கள் கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியில் மத்தியில் அமைந்துள்ளது.

இங்கு வசிக்கக்கூடிய மக்கள் மருத்துவ தேவை என்றால் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்து செல்லும் அவலநிலை காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் நிலை இருந்து வருகிறது. எனவே பழங்குடியின கிராமங்களுக்கு சாலை அமைத்து தர வேண்டும்’’ என்றார்.

Related Stories: