×

ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று இரவு திடீரென காட்டு தீ பற்றியது. இதனை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வனச்சரகம் அய்யனார் கோவில், வாளைகுளம், ராஜாம்பாறை, அம்மன் கோவில், நீராவி, கோட்டைமலை, பிறாவடியார், நவலூத்து, தேவியாறு, சாஸ்தாகோயில் என 9 பீட்டுகளாக பிரிக்கப் பட்டுள்ளது.

இதில், நீராவி பீட் பகுதியில் நேற்று இரவு திடீரென காட்டு தீ பற்றியது. ஒரு பகுதியில் பற்றிய காட்டு தீ, வனப்பகுதியில் வீசிவரும் பலத்த காற்றின் காரணமாக மலையை சுற்றிலும் உள்ள பகுதிகள் முழுவதும் பரவியது. தற்போது மலையை சுற்றி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 100 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது.

நீராவி பீட்டில் பற்றிய தீ தற்போது அருகே உள்ள பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மலையில் உள்ள புல்வகைகள் மற்றும் அரியவகை மூலிகை செடிகளும், மரங்களும் தீயில் எரிந்து வருகிறது. இந்த தீ விபத்தால் வனப்பகுதிக்குள் வசிக்கக் கூடிய புலிகள் மட்டுமின்றி காட்டெருமை, யானை, மான், மிளா, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

தற்போது பரவி வரும் தீயை கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு முதற்கட்டமாக தீ தடுப்பு மற்றும் வனக்காவலர்கள் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பலத்த காற்று வீசி வருவதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை மேலும் அதிகமான நபர்களை தீயை கட்டுப்படுத்த அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Western Ghillside ,Rajapalayam , Fire brigade intensifies wildfires in the Western Ghats near Rajapalayam
× RELATED ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி