ஜோர்டான் துறைமுகத்தில் பயங்கரம் விஷவாயு கசிந்து 10 பேர் பரிதாப சாவு

அகாபா: ஜோர்டான் நாட்டின் துறைமுகத்தில் விஷவாயு கசிந்து 10 பேர் பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்டான் நாட்டின் தெற்கு துறைமுக நகரம் அகாபா. இங்கு விஷ வாயு நிரப்பப்பட்ட தொட்டியை கொண்டு செல்லும் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தது. இதில், விஷ வாயு கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் பரிதாபமாக இறந்தனர். 250க்கும் மேற்பட்டோருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் பைசல் அல்-ஷாபூல் உறுதிப்படுத்தியுள்ளார். விஷ வாயு கசிந்ததால் உடல்நல குறைவு ஏற்பட்டவர்களை அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

உடனடியாக அந்த பகுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும் வாயு கசிவு ஏற்படாமல் இருக்க, ஜோர்டான் அரசு, நிபுணர்களை அனுப்பி வைத்துள்ளது. அதேநேரம், அகாபா பகுதி பொதுமக்கள் வாயு கசிவில் பாதிக்கப்படாமல் இருக்க ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூட அந்நாட்டு அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். அருகிலுள்ள குடியிருப்பு பகுதி 25 கிமீ தொலைவில் இருப்பதால் பாதிப்பு பெரிதாக இருக்காது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வாயு கசிவு தொடர்பாக வீடியோ ஒன்று வெளியானது. அதில், ஒரு பெரிய உருளை போன்ற ஒன்று கிரேனில் இருந்து கீழே விழுந்து கப்பல் ஒன்றின் மேல்தளத்தில் மோதுகிறது. உடனே மஞ்சள் நிற வாயு புகை மண்டலமாக வெளியேறுகிறது. இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: