11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாயின் 2வது கணவர் கைது

பெரம்பூர்: ஓட்டேரியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2வது கணவரை நேற்று போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த மலர் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது), கணவரை பிரிந்து தனியே வசித்து வருகிறார். அவருக்கு 11 வயது மகள், 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களுடன் மலரின் 2வது கணவர் கல்யாண்குமார் வசித்து வருகிறார். இதற்கிடையே 11 வயது சிறுமிக்கு கல்யாண்குமார் பலமுறை பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதேபோல் நேற்று காலை சிறுமி குளித்துவிட்டு உடை மாற்றுவதை கல்யாண்குமார் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதுகுறித்து தாயிடம் அந்த சிறுமி அழுதபடி கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து கல்யாண்குமாருக்கும் மலருக்கும் வாய்த்தகராறு முற்றி அடிதடியானது. இதுகுறித்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மலர் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் கல்யாண்குமார் மற்றும் சிறுமியிடம் தீவிரமாக விசாரித்தனர்.

விசாரணையில், மலர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த சிறுமிக்கு கல்யாண்குமார் பலமுறை பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போக்சோ பிரிவின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கல்யாண்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: