தமிழ்நாடு வேளாண் பல்கலையில் முதுகலை, பி.எச்டி. படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை துவங்கியது; ஆகஸ்ட் 27ம் தேதி நுழைவுத் தேர்வு

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் முதுகலை மற்றும் பி.எச்டி. பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது. ஆகஸ்ட் 27ம் தேதி நுழைவுத் தேர்வு நடக்கிறது.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்ட மேற்படிப்பு பயிலகம் மூலமாக 8 கல்லூரிகளில், 32 துறைகளில் முதுகலை படிப்பு, 28 துறைகளில் பி.எச்டி., பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.

இதற்கு நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது. இதனை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி துவக்கி வைத்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முதுகலை, இளங்கலை படிப்புகளில் கடந்த ஆண்டு கொரோனாவால், மாணவர் சேர்க்கையில் காலதாமதம் ஏற்பட்டது. நடப்பாண்டில், அனைத்து படிப்புகளிலும் உரிய நேரத்தில் மாணவர் சேர்க்கையை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால், பயோடெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்கள் சேர முடியும். நடப்பாண்டில், முதுகலையில் 400 இடங்கள், பி.எச்டி., படிப்பில் 200 இடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு மாணவர்கள், https://admissionsatpgschool.tnau.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு வரும் ஆகஸ்ட் 8ம் தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம். இளங்கலை, முதுகலை முடித்த மாணவர்கள், தற்காலிக சான்றிதழ்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

தற்போது இறுதியாண்டு பயிலும், மாணவர்கள், பல்கலை, பதிவாளர் அல்லது கல்லூரி முதல்வர்களிடம் பெற்ற சான்றிதழ் மூலமாக விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் சேர்க்கையின் போது, பட்டப்படிப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு, pgadmission@tnau.ac.in என்ற இமெயிலை தொடர்பு கொள்ளலாம். மேலும், 94890-56710 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 27ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதற்கு முன் ஆகஸ்ட் 26ம் தேதி மாதிரி நுழைவுத் தேர்வு நடத்தப்படும். செப்டம்பர் இரண்டாவது வாரம் மாணவர் சேர்க்கை முடிக்கப்படும். அக்டோபர் முதல் வாரத்தில் வகுப்புகள் துவங்கும். இவ்வாறு கீதாலட்சுமி கூறினார்.

Related Stories: