தோழி வீட்டில் 10 பவுன் நகை திருடிய ஆசிரியை கைது

திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் கற்பகம்நகர் அருகேயுள்ள சங்கர்நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது  மனைவி செந்தில்நாயகி (51). மதுரையில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் மதுரையை சேர்ந்த அகமதுராஜா மனைவி உமாமகேஸ்வரி (எ) ரகினாபேகம்(32). இருவரும் ஒரே பள்ளியில் பணிபுரிந்து வருவதால் கடந்த 8 ஆண்டுகளாக தோழிகளாக பழகி வந்துள்ளனர்.

இந்தநிலையில், கடந்த மாதம் 27ம் தேதி ஆசிரியை உமாமகேஸ்வரி லேப்டாப்பை கொடுப்பதற்காக திருமங்கலத்தில் உள்ள செந்தில்நாயகி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது செந்தில்நாயகி தான் புதிதாக வாங்கிய ஒன்பதரை பவுன் நகையை (3 பவுன் செயின் மற்றும் ஆறரை பவுன்செயின்) தனது தோழி  உமாமகேஸ்வரியிடம் காட்டியுள்ளார். பின்னர் நகையை தனது படுக்கையறையில் செந்தில்நாயகி வைத்துள்ளார்.

புதுநகையை பார்த்தவுடன் உமாமகேஸ்வரிக்கு நகை மீது ஆசை ஏற்பட்டது. மாலை வரை பேசிவிட்டு வீட்டிற்கு கிளம்பிய உமாமகேஸ்வரி துணிமாற்றி வருவதாக கூறி படுக்கையறைக்கு சென்று மாற்றிவிட்டு கிளம்பியுள்ளார். மறுநாள் நகையை படுக்கையறையில் தேடியபோது மாயமானது தெரியவரவே ஆசிரியை செந்தில்நாயகி அதிர்ச்சியடைந்தார். சந்தேகமடைந்த அவர் இதுகுறித்து உமாமகேஸ்வரியிடம் கேட்கவே அவர் எனக்கு எதுவும் தெரியாது என பதில் கூறியுள்ளார்.

பல இடங்களில் தேடியும் ஒன்பதரை பவுன் நகை கிடைக்காததால் நேற்று செந்தில்நாயகி திருமங்கலம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அப்போது நகையை உமாமகேஸ்வரி (எ) ரகினாபேகத்திடம் தான் கடைசியாக காட்டியதாகவும் தெரிவித்தார். வழக்குப்பதிவு செய்த டவுன் போலீசார் இதுகுறித்து உமாமகேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர்  நகை திருடியதை ஒப்புக்கொண்டு 3 பவுன் நகையை கொடுத்துள்ளார். மீதமுள்ள நகை ஆறரை பவுனை அடகு வைத்துள்ளதாகவும், உடனடியாக திருப்பி தருவதாகவும் கூறினார். இதையடுத்து திருட்டு வழக்கில் ஆசிரியை உமாமகேஸ்வரி (எ) ரகினாபேகத்தை டவுன் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: