காதலி வேறு ஒருவருடன் ஓட்டம்; திருமணமாகி 3 நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை: உருக்கமான வீடியோ வைரல்

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த புதூர் கிராமத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் குமரேசன்(26). இவர் பக்கத்து ஊரான நடுவனந்தல் கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால் இரு வீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 23ம் தேதி திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதனிடையே அந்தப்பெண் வேறு ஒரு நபருடன் காதல் ஏற்பட்டு அவருடன் சென்றுள்ளார்.

இதனால் உறவினர்கள் அவசர அவசரமாக ஏப்பாக்கத்தில் உள்ள குமரேசனின் அத்தை மகளை அதே தேதியில் அதே திருமண மண்டபத்தில் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்துக்கு பிறகு குமரேசன் பெண்ணின் வீட்டிற்கு மறுவீடு செல்லாமல் அவரது வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி மதியம் புதூர் கிராமத்தில் உள்ள அவரது வயலுக்கு சென்ற குமரேசன் வயலில் இருந்த வேப்ப மரத்தில் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.இந்நிலையில் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் குமரேசன் தனது செல்போனில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ‘தான் 7 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், திருமணத்திற்கு சம்மதம் கூறி நிச்சயம் வரை வந்து, அந்த பெண் வேறு ஒருவருடன் ஓடிவிட்டார். இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்பெண்ணுடன் பழகிய தருணங்கள் தன்னை மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும், இனி வேறு ஒரு நபருக்கு இதுபோன்ற செயல் நடைபெறக் கூடாது எனவும், இந்த வீடியோவை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களுக்கும் அனுப்ப வேண்டும் என்று கூறிவிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: