அரிசி மூட்டை வாங்கித் தருவதாக கூறி மோசடி; பெண்ணின் தாயை கொன்று சுடுகாட்டில் புதைப்பு: கைதான தந்தை, மகன் பரபரப்பு வாக்குமூலம்

சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பாக்கம் புதூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் சில தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் குழி தோண்டி, சாக்கு மூட்டையில் கட்டி, புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை போலீசார் தோண்டி எடுத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று விரியூர் கிராம நிர்வாக அலுவலர் ரவியிடம்,  அதே கிராமத்தை சேர்ந்த வீராசாமி(58) மற்றும் அவருடைய மகன் விக்கி (எ) விக்னேஷ் (26) ஆகியோர் சரணடைந்தனர். ஆண்டாள்(55) என்பவரை இருவரும் அடித்து கொலை செய்து பாக்கம் புதூர் கிராமத்தில் புதைத்ததாகவும், போலீசார் எங்களை தேடுவதை அறிந்து சரணடைந்ததாகவும் தெரிவித்தனர். இருவரும் வடபொன்பரப்பி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

போலீசாரிடம் விக்னேஷ் அளித்த வாக்குமூலம்:

நான் பி.இ. பொறியியல் பட்டதாரி. எனது தந்தை வீராசாமி சங்கராபுரத்தில் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்ட் அலுவலகம் வைத்து நடத்தி வந்தார். என் தந்தைக்கு உதவியாக அலுவலக பணிகளை செய்து கொண்டிருந்தேன். கொரோனா காலக்கட்டத்தில் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் பணி முடங்கியது. இதனால், எங்கள் கிராமத்தில் அரிசி வியாபாரம் செய்து கொண்டிருந்த ஆண்டாள் மகள் தனலட்சுமியை அணுகினோம்.

அரிசி வியாபாரம் செய்வதற்காக, பலரிடம் கடன் வாங்கி, 1,000 மூட்டை அரிசி வாங்கித்தரச்சொல்லி தனலட்சுமியிடம் ரூ.15 லட்சத்தை கொடுத்தோம். அதன்படி, அவர் 100 மூட்டை அரிசியைதான் இறக்கினார். அந்த மூட்டைகளையும் வேறு நபருக்கு விற்றுவிட்டார். பின்னர் மொத்தமாக உங்களுக்கு அரிசி மூட்டைகளை இறக்குகிறோம் என கூறினார். ஆனால் அவர் கூறியபடி 2 ஆண்டுகளை கடந்த நிலையிலும் அரிசி மூட்டைகளை இறக்கவில்லை.

இந்நிலையில் எங்களுக்கு கடன் கொடுத்தவர்கள், எங்களிடம் பணத்தை கேட்டு வற்புறுத்தி வந்தனர். நாங்கள், தொடர்ந்து தனலட்சுமி மற்றும் அவரது தாய் ஆண்டாளிடம் பணத்தை திரும்பி தந்துவிடுமாறு கேட்டோம். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனலட்சுமி திடீரென தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து அவரது தாய் ஆண்டாளிடம் சென்று உங்களது மகளை கொண்டு வந்து ஒப்படைக்குமாறு வற்புறுத்தினோம். அதற்கு அவர், இதுதொடர்பாக எனது மகளை கேளுங்கள், என்னிடம் கேட்காதீர்கள் என கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த நாங்கள், அவரை கடத்திச் சென்று எங்களது வீட்டு மாடியில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து, தனலட்சுமி எங்கிருக்கிறார் என்று கேட்டு தொல்லை கொடுத்தோம். அவர் எதுவும் பதிலளிக்காததால் கடந்த 18ம் தேதி மதியம் நானும், எனது தந்தையும் ஆண்டாளின் கழுத்தை நெரித்தும், அவரது புடவையால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்தோம். பின்னர் அந்த கொலையை மறைப்பதற்காக எனது தந்தையின் நண்பர் உதவியுடன் பாக்கம்புதூரில் உள்ள சுடுகாட்டில் நள்ளிரவில்,  ஆண்டாளின் சடலத்தை கொண்டு வந்து புதைத்தோம். இவ்வாறு விக்னேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இக்கொலைக்கு உடந்தையாக இருந்த மற்றொரு நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

Related Stories: