ரூ.13 ஆயிரத்தை எடுக்க முயன்ற போது கழிப்பறை தொட்டிக்குள் விழுந்த அண்ணன், தம்பி சாவு

திருவனந்தபுரம்: ரூ. 13 ஆயிரம் பணத்தை எடுப்பதற்காக கழிப்பறைத் தொட்டிக்குள் இறங்க முயற்சித்த அண்ணன், தம்பி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்குவங்க மாநிலம் பர்தமான் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் ஷேக் (46).  இவரது தம்பிகள் அலாமா ஷேக் (44), ஷேக் அஷ்ராவுல் ஆலம் (33). இவர்கள் கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் திரூரில் கூலி வேலை செய்து வந்தனர். மூன்று பேரும் அங்குள்ள ஒரு வாடகை குடியிருப்பில் ஒன்றாக வசித்து வந்தனர். முகமது இப்ராகிம் ஷேக் திருட்டுக்கு பயந்து தனக்கு கிடைக்கும் சம்பளத்தை எப்போதும் டிரவுசர் பாக்கெட்டில் தான் வைத்திருப்பார்.

இந்நிலையில் நேற்று இரவு இவர் கழிப்பறைக்கு சென்றபோது பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.13,000 பணம் தவறி கழிப்பறைக்குள் விழுந்தது. இந்த விவரத்தை தன்னுடைய தம்பிகளிடம் கூறினார். இதையடுத்து கழிப்பறை தொட்டியை திறந்து பணத்தை எடுக்க மூவரும் தீர்மானித்தனர். இதன்படி கழிப்பறைத் தொட்டியின் சிலாப்பை திறந்து அலாமா ஷேக் இறங்க முயற்சித்தார். அப்போது அவர் தடுமாறி உள்ளே விழுந்தார்.

உடனே அஷ்ராவுல் ஆலம் அண்ணனை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரும் கழிப்பறைக்குள் தவறி விழுந்தார். அதைப் பார்த்த முகம்மது இப்ராகிம் ஷேக் கூக்குரலிட்டார். சத்தத்தைக் கேட்டு அப்பகுதியினர் விரைந்து சென்று இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அலாமா ஷேக் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஷேக் அஷ்ராவுல் ஆலமும் பின்னர் இறந்தார். இந்த சம்பவம் குறித்து திரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: