கடைசி டெஸ்ட் போட்டி இங்கிலாந்துக்கு எதிராக அசத்துவாரா அஸ்வின்?... ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்தியா-இங்கிலாந்துக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் கடந்த ஆண்டு நடந்தது. கொரோனா பரவல் காரணமாக முதல் 4 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்தது. அதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.  கடைசிப் போட்டி நடைபெறவில்லை. அந்த போட்டிதான் வரும் ஜூலை 1 முதல் 5ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா டிரா செய்தாலே  தொடரை கைப்பற்றிவிடலாம்.

இந்நிலையில் இந்திய அணியிலிருந்து, காயம் காரணமாக துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் விலகியதை அடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின், விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு கொரோனா உறுதியானது. இதில் கோஹ்லிக்கு கொரோனா உறுதியாகி, மறுநாளே நெகடிவ் என வந்துவிட்டது. இதையடுத்து ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா உறுதியானதாக தகவல் வெளியானது. அவருக்கு இன்னும் குணமடையவில்லை.

இதனால், துவக்க வீரர் இடத்திற்காக மயங்க் அகர்வால் அவசர அவசரமாக இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளார். 22 பேர் கொண்ட இந்திய அணிக் குழுவில் மாற்று ஓபனரை சேர்க்காமல் ரோஹித், ஷுப்மன் கில்லை நம்பி சென்றதால்தான், இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் கொரோனாவில் இருந்து விடுபட்டு, இங்கிலாந்து புறப்பட்டு சென்றுவிட்டார். அங்கு கவுண்டி அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் கடைசி நாளில் சிறப்பாக பந்துவீசி, 2 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இவருடன் பந்துவீசிய ஜடேஜா அதிக ரன்களை விட்டுக்கொடுத்து சொதப்பினார். இதனால், அஸ்வின் அணியில் இடம்பெறுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.

அஸ்வின் பொதுவாக இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அபாரமாக பந்துவீசி, விக்கெட்களை வீழ்த்தக் கூடியவர். இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரரும் இடது கை பேட்ஸ்மேனுமான அலெக்ஸ் லீஸ் தற்போது தடுமாற்றமான ஆட்டத்தைத்தான் வெளிப்படுத்தி வருகிறார். இதனால், அவரது விக்கெட்டை அஸ்வின் விரைந்து எடுத்துக்கொடுக்க அதிக வாய்ப்புள்ளது.

இதுபோல் இங்கிலாந்து கேப்டனும் இடது கை பேட்ஸ்மேனுமான பென் ஸ்டோக்ஸையும் அஸ்வினால் கட்டுப்படுத்தி விக்கெட் எடுக்கமுடியும். இந்த 2 விக்கெட்களை விரைந்து வீழ்த்திவிட்டால், அந்த அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்த முடியும். எனவே அஸ்வின் மீது ரசிகர்கள் மட்டுமல்ல... அனைவருக்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் சாதிப்பாரா அல்லது சறுக்குவாரா என்பது போட்டியின்போதுதான் தெரியவரும்.

Related Stories: