தாம்பரம் ரயில் நிலையத்தில் வாலிபரிடம் ரூ. 15.50 லட்சம் பறிமுதல் ஹவாலா பணமா? விசாரணை

தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த வாலிபரிடம்  உரிய ஆவணமில்லாததால் ரூ. 15.50 லட்சம்  பறிமுதல் செய்யப்பட்டது. இது ஹவாலா பணமா? என  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு வரும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹவாலா பணம் கடத்தி வருவதாக தாம்பரம் மத்திய ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தாம்பரம் ரயில் நிலையத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது, ஒவ்வொரு பெட்டியாக  ஏறி சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு பெட்டியில் இருந்த திண்டிவனம் பகுதியை சேர்ந்த பிச்சைமுத்து (35) என்பவர் வைத்திருந்த  பையை சோதனை செய்தபோது, அதில் கட்டுகட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை எண்ணிபார்த்தபோது 15 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்தது.

ஆனால் இந்த பணத்துக்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லை என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது,  தான் நகை வியாபாரி என்றும், நகை வாங்குவதற்காக கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவரிடமிருந்து ரூ. 15.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் பிச்சைமுத்துவை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.  பறிமுதல் செய்யப்பட்டது ஹவாலா பணமா? கணக்கில் வராத பணமா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: