அங்கன்வாடி ஊழியர்களுக்கு அதிமுக ஆட்சியில் வழங்கிய செல்போன் ஒப்படைக்கும் போராட்டம்: மாநில துணை தலைவர் தகவல்

திருவள்ளூர்: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவள்ளூரில்  நேற்று நடைபெற்றது. மாநில துணை தலைவர் ஆர்.லட்சுமி தலைமை வகித்து பேசுகையில், தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் செல்போன் கொடுத்து வேலை செய்ய சொல்லியிருந்தனர். மார்க்கெட்டில் திவாலான கம்பெனி  மூலம் கொள்முதல் செய்யப்பட்ட செல்போன்கள் 2 ஆண்டு மட்டுமே பயன்படும் என தெரிவித்திருந்தனர். ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை செல்போனை திரும்ப பெறவில்லை.

கிராமப்புறங்களில் செல்போனை உபயோகப்படுத்த சிரமமாக இருக்கிறது. அடிக்கடி செல்போன் பழுதாவதால் சரிசெய்ய ரூ.1000 முதல் ரூ.2 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் மாநில அங்கன்வாடி மையம் எடுத்த தீர்மானத்தின்படி நாளை (29ம்தேதி) ஒரே நாளில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டார அலுவலகத்திலும் செல்போனை ஒப்படைக்க போகிறோம்.

எரிவாயு சிலிண்டர் வாங்கும் பில் முழுமையான தொகை வழங்கவேண்டும். காலி பணியிடங்களை  நிரப்பவேண்டும். மூன்று வருடம் பணி முடித்த மினி அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும். ஏற்கனவே மினி மையத்தில் இருந்து மெயின் மையத்திற்கு பதவி உயர்வில் சென்ற ஊழியர்களுக்கு 10 ஆண்டுக்கான ஊதிய உயர்வு வழங்க வேண்டும். எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு அனுபவம் மிக்க அங்கன்வாடி ஊழியர்களை ஆசிரியர்களாக நியமிக்கவேண்டும்.

உணவு செலவினங்களுக்கு முன் பணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.  அங்கன்வாடி இயக்குனர் அலுவலகம் அருகே வரும் 30ந்தேதி  காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம். இயக்குனர் அழைத்து பேசும் வரையில் போராட்டம் தொடரும். அரசை எதிர்த்து அல்ல, இயக்குனரை எதிர்த்துதான் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: