தொல்லியல்துறை அனுமதி பெறாததால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி காஞ்சியில் 2 மாடி கட்டிடம் இடிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தொல்லியல்துறை அனுமதி பெறாமல் 2 மாடி வீடு கட்டியதால்,  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி  இடிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள்கோயில் அருகே வசித்து வருபவர் அருள்ஜோதி. இவர், காஞ்சிபுரத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அருள்ஜோதியின் பக்கத்து வீட்டுக்காரர் குப்புசாமி. இவரது 3 அடி இடத்தில் அருள்ஜோதி கட்டிடம் கட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அருள்ஜோதிக்கும், குப்புசாமிக்கும் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து தகராறு இருந்து வந்தது.  

வீடு கட்டும் பணியை நிறுத்துவதற்காக  பக்கத்துவீட்டுக்காரர் குப்புசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2010ம் ஆண்டு வழக்கு தொடந்தார்.இதனிடையே, கோயில் அருகே 300 மீட்டருக்குள் வீடு கட்டவேண்டும் என்றால் தொல்லியல்துறை அனுமதி பெறவேண்டும் என்பது விதிமுறை. அருள்ஜோதியின் வீடு அருகே தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீவைகுண்ட பெருமாள் கோயில் உள்ளது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் தொல்லியல் துறையிடம் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 2 மாடி கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது. அப்போது, பாதிக்கப்பட்டவர் தரப்பில் இருந்து காலஅவகாசம் கேட்கப்பட்டது.காலஅவகாசம் முடிந்த நிலையில் இன்று காலை தொல்லியல்துறை, காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள், மின்சாரத்துறை, வருவாய்துறை, காவல்துறை என 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்றனர். பின்னர்,  அதிகாரிகள் முன்னிலையில் 2 மாடி கட்டிடம் இடிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டித்தின் மதிப்பு 1.5 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

Related Stories: