துறைமுகத்தில் வேருக்கு விழா 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்கினார்

தண்டையார்பேட்டை: துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் நேற்றிரவு வேருக்கு விழா நிகழ்ச்சியில், 1500 பேருக்கு கல்வி உபகரணங்கள், தையல் மெஷின் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்கினார். இதில் அமைச்சர் சேகர்பாபு, மத்தியசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுகம் தொகுதி திமுக சார்பில், நேற்றிரவு அரண்மனைக்காரன் தெருவில் வேருக்கு விழா நிகழ்ச்சியில் உதயம் வருகிறது, இதயம் வளர்கிறது எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தார். இக்கூட்டத்தில், இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின், மத்தியசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் 450 பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், தயாளு அம்மாள் தொண்டு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 271 பெண்களுக்கு தையல் இயந்திரம், 309 பேருக்கு மடிகணினி, 450 கல்லூரி மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை என மொத்தம் 1500 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இதில் எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றியழகன், பர்வீன் சுல்தானா, மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: