பாதுகாப்பு வசதி இல்லாத 9 பள்ளி வாகனம் இயக்க அனுமதி மறுப்பு: போக்குவரத்து அலுவலர் அதிரடி

ஆலந்தூர்: ஆலந்தூரில் உரிய பாதுகாப்பு வசதியில்லாத 9 பள்ளி வாகனங்களை இயக்க அனுமதி மறுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களின் ஆவணங்களில் பாதுகாப்பு வசதி உள்ளதா? என சோதனை செய்வதற்காக 131 பள்ளி வாகனங்கள் ஆலந்தூரில் உள்ள ஆர்டிஓ மைதானத்திற்கு நேற்று கொண்டுவரப்பட்டன.

இந்த பள்ளி வாகனங்களை மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போக்குவரத்து ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், வாகனங்களின் உரிமம், ஓட்டுனரின் உரிமம், படிக்கட்டுகள், ஆபத்து காலத்தில் வெளியேறும் வசதிகள், முதலுதவி பெட்டி ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வு முடிவில், உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத 9 வாகனங்களை இயக்க அனுமதி மறுக்கப்பட்டது.

உரிய பாதுகாப்பு வசதி செய்தபின் சம்பந்தப்பட்ட பள்ளி வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.மேலும் பள்ளி வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு வாகன விதிமுறைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.

Related Stories: