செங்கல்பட்டு அருகே கால்டாக்சி டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே கடந்த 2 நாட்களுக்கு முன் ஒரு கால்டாக்சி டிரைவர் கழுத்தறுக்கப்பட்டு, முகம் சிதைந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது சடலத்தை வாங்க மறுத்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இக்கொலை வழக்கு தொடர்பாக இன்று காலை 3 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். செங்கல்பட்டு அருகே வல்லம் பேருந்து நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் நள்ளிரவில் ஒரு வாலிபர் கழுத்தறுக்கப்பட்டு, முகம் சிதைந்த நிலையில் உயிருக்கு போராடினார்.

பின்னர் அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கடந்த 26ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்துபோன நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், கொலைக்கான காரணம் என பல்வேறு கோணங்களில் விசாரித்தனர்.

முதல்கட்ட விசாரணையில், இறந்துபோன நபர் சென்னை சோழிங்கநல்லூர் அருகே ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் அர்ஜுனன் (30) எனத் தெரியவந்தது. மேலும், சம்பவத்தன்று இவரது வாடகை காரில் ஏறிய ஒரு மர்ம கும்பல் இரவுபகலாக சுற்றிவிட்டு, பின்னர் வல்லம் பேருந்து நிலையம் அருகே அர்ஜுனனை சரமாரி தாக்கிவிட்டு, அவரது காருடன் தப்பி சென்றிருப்பது தெரியவந்தது.

இதற்கிடையே படுகொலை செய்யப்பட்ட கால்டாக்சி டிரைவர் அர்ஜுனனின் சடலத்தை வாங்க மறுத்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மனைவி மற்றும் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, அர்ஜுனனை கொன்ற மர்ம நபர்களை தனிப்படை அமைத்து தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில், கால்டாக்சி டிரைவர் அர்ஜுனன் கொலை வழக்கு தொடர்பாக இன்று காலை பெரம்பலூர் மாவட்டம், கரியனூர் கிராமத்தைச் சேர்ந்த திருமூர்த்தி, பிரசாந்த், கட்டிமுத்து ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் பிடித்து, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் 3 பேரையும் போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: