கொடைக்கானலில் மீண்டும் போதை காளான் விற்பனை அதிகரிப்பு: ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு விற்பனை செய்யும் கும்பல்

கொடைக்கானல்: கொடைக்கானலில் மீண்டும் போதை காளான் விற்பனை அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. கொடைக்கானலுக்கு வெறும் வெளிமாநில சுற்றுலா பயணிகளை குறிவைத்து மேஜிக் மஸ்ரூம் எனப்படும் காளான் விற்பனை மீண்டும் களைகட்ட தொடங்கியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. 8 மணி நேரம் வரை போதையில் வைத்திருக்கும் என கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் இயற்கை சார்ந்த வனப்பகுதியாகும். அங்கு பல்வேறு தாவரங்களும் அரியவகை காளான்களும், மூலிகைச் செடிகளும் வளர்ந்து வருகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளான் வகைகள் உள்ள நிலையில் காடுகளில் இயற்கையாகவே வளரக்கூடிய ஒருவகை காளானில் போதையூட்டும் வேதி பொருள் கலந்துள்ளது.

இந்த வகை காளான் மேஜிக் மஸ்ரூம், போதைக்காளான் என அழைக்கப்படும். இந்த காளான் சில வருடங்களுக்கு முன்னர் போதைக்காக மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வந்தது. போதைக்காக இந்த காளான் பயன்படுத்தப்படுவது தெரிய வந்ததை அடுத்து அது தடை செய்யப்பட்டது. போதை காளான் விற்பனை செய்யப்படும் நபர்கள் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து போதைக்காளான் விற்பனை குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கொடைக்கானலில் போதைக்காளான் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. வெளிமாநிலத்தில் இருந்து வரக்கூடிய இளைஞர்களை குறிவைத்து நூதனமாக விற்பனை நடைபெற்று வருகிறது.

இணையதளம் மூலம் செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டு அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டால் போதைக்காளான் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் போதை காளான் என்ற பெயரில் போலி காளான்களையும் ஒருசில விற்று காசு பார்த்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வப்போது போதைக்காளான் பெயரில் சிலர் பிடிபட்டாலும் அவர்கள் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறை தண்டனை அளிக்கப்படுவதாகவும், போதைக்காளான் வைத்திருப்பவர்களுக்கு தனி சட்டம் இயற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை காளான் சப்ளையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போதை காளான் என்ற பெயரில் சாதாரண காளானை அதிக விலைக்கு விற்று நூதன மோசடியில் ஈடுபடும் கும்பல் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Stories: