குடிமனை பட்டா கேட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்

பூந்தமல்லி: வளசரவாக்கம் அருகே கடந்த 70 ஆண்டுகளாக வசித்து வரும் குடியிருப்புகளுக்கு குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி, நேற்று அப்பகுதி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வளசரவாக்கம் அருகே ராமாபுரம், திருமலை நகர் பகுதியில், கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 2500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பூர்வீகமாக வசித்து வருகின்றனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் இப்பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் ஆக்கிரமிப்பு நிலங்கள் எனக் கூறி, அப்பகுதி வீடுகளை அகற்ற மாநகராட்சியின் வளசரவாக்கம் மண்டல அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்ட வந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருமலை நகரில் நீண்ட காலமாக குடியிருப்புகளில் வசித்து வருபவர்களுக்கு குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி, நேற்று ராமாபுரத்தில் அப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் பதாகைகள் ஏந்தியபடி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் இருந்த மக்கள் கூறுகையில், எங்களுக்கு குடிமனை பட்டா வழங்க கோரியும், 70 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் எங்களுக்கு நிலவகை மாற்றம் செய்து, குடிமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Related Stories: