வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம், இன்று இரவு ஆம்பூர் பயணம்

வேலூர்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக இன்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு ஆம்பூர் செல்கிறார்.

திருப்பத்தூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டு புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக முதல்வர், இன்று இரவு ஆம்பூர் வருகிறார்.

நாளை காலை கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதைதொடர்ந்து, நாளை பிற்பகல் வேலூர் புதிய பஸ் நிலையத்தை திறந்து வைக்க உள்ளார். இதையடுத்து வேலூர் சுற்றுலா மாளிகையில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.

அதன்பிறகு நாளை மாலை 4 மணியளவில் வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். அங்கு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் பேசுகிறார். வேலூர் பயணத்தை முடித்துவிட்டு நாளை இரவு முதல்வர் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டை செல்கிறார்.

அன்றிரவு அங்கு தங்குகிறார். மறுநாள் 30ம்தேதி காலை ராணிப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள புதிய கலெக்டர் அலுவலகத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னை செல்கிறார்.

Related Stories: