விராலிமலை பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பால் பஸ்கள் திணறல்-நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

விராலிமலை : விராலிமலை பேருந்து நிலையத்தின் உள்ளே வணிக கடைகள் ஆக்கிரமிப்பால் பேருந்துகள் உள்ளே சென்று வரமுடியாத நிலை இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.விராலிமலை-திருச்சி சாலையில் இயங்கி வரும் புதிய பேருந்து நிலையத்தில் நகரப் பேருந்து மற்றும் ஒரு சில பேருந்துகள் மட்டுமே உள்ளே சென்று வருகின்றன என்று ஏற்கனவே பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்நிலையில் தற்போது திங்கள்கிழமை இயங்கி வரும் வாரச்சத்தையின் போது அமைக்கப்படும் வணிக கடைகள் அதிக அளவு பேருந்து நிலையத்தின் உள்ளே ஆக்கிரமித்து அமைக்கப்படுகிறது. அதோடு வாரச் சந்தைக்கு வரும் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் வாகனங்களும் பேருந்து நிலையத்திற்குள் நிறுத்தப்படுவதால் உள்ளே பயணிகளை ஏற்றி இறக்க வரும் ஒரு சில பேருந்துகளும் உள்ளே வந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளே அமைக்கப்பட்டுள்ளது பல ஆயிரம் பணம் கட்டி ஒப்பந்த அடிப்படையில் இயங்கி வரும் இந்த கடைகளுக்கும் இதுபோல் வாரம் தோறும் திங்கள்கிழமை திடீரென்று அமைக்கப்படும் வணிக கடைகளால் உரிய வியாபாரம் செய்யமுடியாமல் திணறுகின்றனர். இதைத்தவிர பயணிகள் பேருந்து காத்திருக்கும் போது அமர்வதற்கு இருக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன, பயணிகள் வந்து செல்ல நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. பேருந்து செல்லும் பகுதிகளில் வணிக கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதால் திங்கள்கிழமை வார சந்தையின் போது பொதுமக்கள், மாணவர்கள் ஒதுங்கக் கூட கிடைக்காமல் சென்று வருவது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இது குறித்து பயணிகள் கூறும்போது ஒரு சில பேருந்துகள் மட்டுமே இந்த பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்கின்றன அதிலும் திங்கள்கிழமை வாரச்சந்தையின் போது சந்தை பகுதிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வணிக கடைகள் அமைக்காமால் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து வருவதோடு இருசக்கர வாகனமும் உள்ளே நிறுத்தப்படுவதால் பேருந்துகள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகள், பொதுமக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: