தீவிரவாதம், போதை பொருள் கடத்தலை தடுக்க கடலோர மாவட்டங்களில் 48 மணி நேரம் பாதுகாப்பு ஒத்திகை; ரோந்து படகுகள் மூலம் தீவிர கண்காணிப்பு

சென்னை: கடல்மார்க்கமாக தீவிரவாதம் அச்சுறுத்தல் மற்றும் போதை பொருள் கடத்தலை தடுக்கும் வகையில் 48 மணி நேரம் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் போலீசாரே தீவிரவாதிகள் போல் வேடம் அணிந்து ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

மும்பை தொடர் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழக கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழுமம், கடலோர பாதுகாப்பு படை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்து வருகிறது. அந்த வகையில் தமிழக கடலோர மாவட்டங்களில் 48 மணி நேரம் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்து வருகிறது.

குறிப்பாக திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், நாகை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி என 12 கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடந்து வருகிறது.

இந்த பாதுகாப்பு ஒத்திகையை கடலோர பாதுகாப்பு குழுமம், கடலோர பாதுகாப்பு படையினர் இணைந்து நடத்துகின்றனர்.

இதில், போலீசாரே டம்மி வெடிகுண்டுகள், டம்மி துப்பாக்கியுடன் தீவிரவாதிகள் போல் படகு மூலம் தமிழக கடற்கரை மார்க்கமாக உள்ளே நுழைவது போலவும், போதை பொருட்களை வெளிநாடுகளில் இருந்து படகுகள் மூலம் தமிழகத்திற்குள் கடத்தி வருவது போலவும் ஒத்திகை நடைபெற்றது.

ஒவ்வொரு கடலோர மாவட்டத்திலும் கடலோர பாதுகாப்பு குழும டிஎஸ்பி தலைமையில் நடந்து வருகிறது. இந்த பாதுகாப்பு ஒத்திகையால் தமிழக கடலோர மாவட்டங்களில் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

ரோந்து படகுகள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த 48 மணி நேரம் பாதுகாப்பு ஒத்திகையால் கடலோர மாவட்டங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: