ஆந்திராவில் முதல் முறையாக 5 மாடி கட்டிடத்துக்கு சோலார் தகடுகள் அமைப்பு-100 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி

திருமலை : ஆந்திராவின் முதல் முறையாக சூரிய சக்தியால் இயங்கும் பசுமைக் கட்டிடம் விசாகப்பட்டினத்தில் கட்டப்பட்டுள்ளது. 5 மாடிகள் கொண்ட இந்த ஓட்டல் கட்டிடத்தில் கண்ணாடிக்கு மாற்றாக சோலார்  பேனல்கள் அமைக்கப்பட்டதால் ஒரு நாளைக்கு சுமார் 100 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆந்திரப் பிரதேசத்தில் முதன்முறையாக, விசாகப்பட்டினத்தில் குருத்வாரா சந்திப்பு அருகே ஐந்து மாடிகளை கொண்ட இந்த ஸ்மார்ட் கட்டிடத்தில் முதல் தளத்தில் இருந்து கட்டிடத்தின் மேல்பகுதி வரை சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.  இந்த பேனல்கள்  மூலம் ஒரு நாளைக்கு சுமார் 100 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்த மின்சாரத்தில் ஓட்டல் பயன்பாட்டிற்கு பிறகு மீதமுள்ள மின்சாரத்தை மின்வாரியத்திற்கு விற்பனை செய்யப்படுவதால்  இதன்மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. இந்த சூரிய ஒளியில் இயங்கும் பசுமைக் கட்டிடத்தில் 24 ஏசி அறைகள் கொண்ட விருந்தினர் மாளிகை உள்ளது.  

இதுகுறித்து கட்டிட உரிமையாளர் நாராயண ராவ் என்கிற பாப்ஜி கூறியதாவது:புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பால் ஈர்க்கப்பட்டேன். ₹40 லட்சம் மதிப்பில் கட்டிடத்தில் 200 சோலார் தகடுகள் கட்டிடத்தில் அமைக்கப்பட்டது. இதன் மூலம் தினசரி மின்சார தேவை 40 கிலோவாட். இருப்பினும் 100  கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

 எனவே எங்கள் கட்டிட தேவைக்கு பிறகு 60 சதவீத மீதமுள்ள மின்சாரத்தை ஆந்திர பிரதேச கிழக்கு மின் விநியோக நிறுவனத்துக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சோலார் தகடுகள் பதிக்கப்பட்ட இந்த ஓட்டல் இன்னும் சில நாட்களில் வாடிக்கையாளர்களுக்குக் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். கட்டிடம் முழுவதும் சோலார் பேனல்கள்  அமைத்து இருப்பது ஓட்டலின் சிறப்பு. சாதாரணமாக கட்டிடத்தில் கண்ணாடிகள் அமைக்கப்படும் நிலையில் சோலார் தகடுகல் பதிக்கப்பட்டதால் 20 சதவீதம் செலவு அதிகமானாலும் பார்ப்பதற்கு கண்ணாடியைப் போன்று இருப்பதோடு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

சோலார் பேனல்கள் உள்ளதால்  ஓட்டலுக்கு போதுமான மின்சாரம் தடையின்றி இருக்கும். இதனால் லிப்ட், டிவி, ஏசி, மின்விசிறி, விளக்குகள் என ஓட்டலில் உள்ள ஒவ்வொரு மின்சாரப் பொருளும் இந்த சோலார் மின்சாரம் மூலம்தான் இயங்குகிறது. கரண்ட் பில் இல்லை என்பதால்  வாடிக்கையாளர்களுக்கு சற்று குறைந்த கட்டணத்தில் ஓட்டல் அறைகளைப் பெற முடியும், இது எதிர்காலத்தில் ஓட்டல் துறையில் ஒரு புரட்சிகர வளர்ச்சியாகவும் அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: