ரிஷிவந்தியம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் 5 வகுப்புகளுக்கு ஒரே ஆசிரியர் இருக்கும் அவலம் -கூடுதல் ஆசிரியர் நியமிக்க கோரிக்கை

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேரந்தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த 2015ம் ஆண்டு முதல் ஒரு ஆசிரியரே பாடம் நடத்தும் நிலை இருந்து வருகிறது. இப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேரந்தாங்கல் கிராமத்தில் 1986ம் ஆண்டில் அரசு தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை தற்போது 56 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் கடந்த 2015ம் ஆண்டு முதல் பாடம் நடத்தி வருகிறார். இந்த பள்ளியில் பாடம் நடத்துவதற்கு 2 ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும்.

இந்த ஊர் கிராமப்புறத்தில் உள்ளதாலும், பேருந்து வசதி இல்லாததாலும் இப்பள்ளியில் பணியாற்ற ஆசிரியர்கள் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. தலைமையாசிரியர் மட்டும் பணியாற்றி வருகிறார். இவருடைய சொந்த விடுப்புகள், அலுவலக சம்பந்தமான வேலைகள், அவருக்கு பிஆர்சி மூலம் அளிக்கப்படும் பயிற்சி வகுப்புகள் ஆகிய நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறைதான்.

இந்த பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர் நியமனம் செய்யக்கோரி பெற்றோர்களும், தலைமை ஆசிரியரும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை முறையிட்டும் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இந்த பள்ளி மாணவ-மாணவிகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பள்ளிக்கு விடுமுறை இல்லாமல் பள்ளி நேரங்களில் முழு நேரமும் தொடர்ந்து செயல்பட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: