நீர்வீழ்ச்சியில் மூழ்கி துணை தாசில்தார் பலி அடர் காட்டு பாதையில் துரிதமாக செயல்பட்ட பேரிடர் மீட்பு படைக்கு பொதுமக்கள் பாராட்டு

சின்னசேலம் : திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சண்முகம் மகன் சுந்தர் (36). இவர் திருமணமானவர். 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் திருக்கோவிலூர் தாசில்தார் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் கவ்வியம் நீர்வீழ்ச்சியில் சுந்தர் உள்ளிட்ட நண்பர்கள் குளித்தபோது சுந்தர் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனால் பதறிப்போன அவருடன் சென்ற நண்பர்கள் கரியாலூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் உள்ளிட்ட போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சென்று சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே கல்வராயன்மலை பாதைகளில் இயற்கை சீற்றத்தின்போது ஏற்படும் மண் சரிவு மற்றும் பேரழிவுகளை தடுப்பது குறித்து கல்வராயன்மலையில் முகாமிட்டு பேரிடர் மீட்புக்குழுவின் இன்ஸ்பெக்டர் சஞ்சீவ் தேஸ்வால் தலைமையிலான குழுவினர் 18 பேர் ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நீர்வீழ்ச்சியில் துணை தாசில்தார் இறந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பேரிடர் மீட்புக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மிக குறைந்த நேரத்தில் சடலத்தை தேடி கண்டு பிடித்து மீட்டனர். அதுமட்டுமல்லாமல் பேரிடர் மீட்பு படையினர் அடர்ந்த காட்டு பாதையில் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் இறந்து போனவரின் சடலத்தை சுமந்து வந்து ஆம்புலன்சில் ஏற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கரடு முரடான பாதையில் இறந்து போனவரின் சடலத்தை சுமந்து வந்த பேரிடர் மீட்பு படையினரை பொதுமக்களும், வருவாய்த்துறையினரும் பாராட்டினர்.

Related Stories: