மேட்டூர் அணை முன்கூட்டியே திறந்ததால் மேய்ச்சலுக்கு வந்த செம்மறி ஆடுகள் ஒருமாதம் முன்பே ஊருக்கு திரும்பியது-சாலைவழியாக ஓட்டிச் சென்றனர்

திருத்துறைப்பூண்டி : மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதால் வயல்களுக்கு தண்ணீர் வந்ததையடுத்து வெளி மாவட்டங்களிலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு மேய்ச்சலுக்காக கொண்டு வரப்பட்ட செம்மறி ஆடுகளை சொந்த ஊர்களுக்கு கால்நடையாக ஓட்டிச் சென்றனர்.சிவகங்கை, காரைக்குடி, தஞ்சாவூர் மாவட்டங்களிலிருந்து ஆண்டுதோறும் செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக திருத்துறைப்பூண்டி தாலுக்கா பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாகவும், நடைபாதை வழியாகவும் கொண்டு வந்து இங்கு கிராமங்களில் தங்கி செம்மறி ஆடுகளை மேய்த்து வருவது வழக்கம். அங்கு வயல்களில் ஆடுகள் மேய்வதால் நெற்பயிர்களுக்கு இயற்கை உரம் கிடைக்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை கிராமங்களில் உள்ள வயல்களுக்கு இயற்கை உரத்திற்காக ஆட்டு கிடை அமைப்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இந்தாண்டும் அதேபோன்று ஜனவரி மாதத்தில் சிவகங்கை, தஞ்சாவூர் மாவட்டங்களிலிருந்து பல ஆடு வளர்ப்போர் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் கொண்டு வரப்பட்டன. மழைக்காலம் துவங்குவற்கு முன்பாக செம்மறி ஆடுகள் ஜூலை மாதம் தான் சொந்த ஊருக்கு கொண்டு போக வேண்டும்.

ஆனால் இந்த வருடம் கடந்த மே மாதம் 24ம் தேதியே வழக்கத்தை விட முன்கூட்டி மேட்டூர் அணையில் நீர் திறந்ததால் ஜூன் மாதமே திருத்துறைப்பூண்டி பகுதிகளுக்கு வயல்களில் தண்ணீர் வந்துவிட்டது. இதனால் செம்மறி ஆடுகளை ஒரு மாதம் முன்பே சொந்த ஊருக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஏற்பட்டுள்ளது. எனவே ஆடுகளின் உரிமையாளர்கள் வாகனம் மூலமாகவும், சாலை நடைபாதை வழியாகவும் செம்மறி ஆடுகளை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.

Related Stories: