வேலூரில் அதிர்ஷ்டவசமாக தம்பதி உயிர் தப்பினர் காஸ் கசிந்த விபத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது-போலீசார், தீயணைப்பு துறையினர் விசாரணை

வேலூர் : வேலூர் கொசப்பேட்டை விநாயக முதலியார் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(36). இவர் மனைவி தேவி. தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். சுரேஷ் ஆரணி சாலையில் தள்ளுவண்டி டிபன் கடை வைத்து உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை புதிதாக சிலிண்டர் வீட்டிற்கு வந்துள்ளது. தீர்ந்துபோன சிலிண்டரை அகற்றிவிட்டு புதிய சிலிண்டரை மாற்றியதாக கூறப்படுகிறது. அப்போது சிலிண்டர் சரியாக பொருந்தவில்லையாம். இதனால் கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது.

நீண்ட நேரமாக போராடியும் சரிசெய்ய முடியவில்லையாம். ஒரு கட்டத்தில் சிலிண்டரை தூக்கிக் கொண்டு சுரேஷ் வெளியே வந்துள்ளார். சிறிது நேரத்தில் வீட்டின் இரு பக்க சுவரும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி விழுந்துள்ளது. அப்போது அருகில் நின்றிருந்த சுரேஷ் மனைவி தேவிக்கு மட்டும் சிறிய காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த சத்தம் கேட்ட அக்கம், பக்கத்தினர் அங்கு குவிந்தனர். இதுகுறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மேலும் வீட்டை ஆய்வு செய்தனர். சுவர்கள் மட்டும் இடிந்து விழுந்துள்ள நிலையில் பக்கத்தில் உள்ள சுவரில் தீக்கறைகளும் படிந்து இருந்தது. மேலும் தகவல் அறிந்து தெற்கு போலீசாரும் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:வீட்டில் சிலிண்டர் மாற்றும்போது சரியாக லாக் ஆகவில்லையாம். இதனால் வீடு முழுவதும் கேஸ் கசிந்து இருந்துள்ளது. சிலிண்டரை வெளியே கொண்டு சென்ற பிறகு தேவி லைட் போட சுவிட்ச் போட்டுள்ளார். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் தேவிக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சிலிண்டர் வெளியே கொண்டு சென்றதால் ெபரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடக்கிறது.

 இவ்வாறு அவர்கள் கூறினர்.

கேஸ் கசிவு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

வீட்டில் கேஸ் கசிந்து விட்டால் முதலில் பதட்டம் அடையாமல் இருக்க வேண்டும். அதன் பிறகு வீட்டில் மின்சார சாதனங்களை இயக்கவோ அல்லது அணைக்கவோ கூடாது. விளக்கு, தீக்குச்சி, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி போன்ற ஏதாவது எரிந்து கொண்டு இருந்தால் உடனடியாக அணைத்துவிட வேண்டும். அதன்பிறகு ரெகுலேட்டரை ஆப் செய்துவிட்டு சமையலறையில் உள்ள அனைத்து ஜன்னல்களையும் திறந்துவிட வேண்டும். அதன்பிறகு கேஸ் அலுவலகத்திற்கு போன் செய்து சொல்ல வேண்டும். அதுவரை பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும் என்று கேஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: