மக்கள் குறைதீர்வு நாளில் மனு கொடுக்க வந்த மனைவியை தடுத்து தாக்கிய மாஜி ராணுவ வீரர்-கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

வேலூர் : ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து முதியோர் ஓய்வூதியம், மனைப்பட்டா, திருமண நிதியுதவி உட்பட தனிநபர், பொதுபிரச்னை சார்ந்த கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அதேபோல் கரிகிரி கிராம மக்கள் அளித்த மனுவில், கரிகிரி கிராமத்தில் உள்ள கோயில்களில் அறங்காவல் குழுக்களில் அரசியல், சாதி சார்பின்றி நியமிக்க வேண்டும் என்று கேட்டிருந்தனர். ஊசூர் அடுத்த சேக்கனூரை சேர்ந்த மக்கள், பொதுவழி இடத்தை ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும் என்று மனு அளித்தனர்.

தொடர்ந்து விசி கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துணை செயலாளர் நிஜாமுதீன் தலைமையில் வந்த மக்கள், அரியூரில் வக்ப் போர்டு இடத்தை மீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். இக்கூட்டத்தில் திட்ட அலுவலர் ஆர்த்தி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதற்கிடையில் வேலூர் தாலுகா கணியம்பாடி அடுத்த சின்னபாலம்பாக்கத்தை சேர்ந்த சுபாஷினி என்பவர் தனது மகள்களுடன் கோரிக்கை மனு வழங்க வரிசையில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது கணவரான மாஜி படைவீரர் வேல்முருகன்(42), சுபாஷினியின் கையை பிடித்து இழுத்து திடீரென தாக்கினார். இதில் நிலைகுலைந்த சுபாஷினி கீழே விழுந்தார். இதை பார்த்த அவரது மகள்கள் அச்சத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த போலீசாரும், பொதுமக்களும் விரைந்து சென்று சுபாஷினியின் கணவனை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர், ‘இது என் மனைவி? யாரும் இதில் தலையிட வேண்டாம்’ என்று மிரட்டினார்.அதற்குள் டிஆர்ஓ ராமமூர்த்தி, கலாட்டா செய்து கொண்டிருந்தவரை வெளியேற உத்தரவிட்டார். என் மனைவியை என்னுடன் வரச்சொல்லுங்கள், எங்கள் பிரச்னையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையறிந்து வந்த சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார், சுபாஷினியின் கணவர் வேல்முருகனை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றனர். ஆனாலும் வேல்முருகன் இன்ஸ்பெக்டர் கருணாகரனை பார்த்து ஒருமையில் பேசி மிரட்டினார். ஒரு வழியாக அவரை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் தயாராக இருந்த ஜீப்பில் ஏற்றினர். அப்போது கண்ணீருடன் சுபாஷினி கூறும்போது, ‘அடிக்கடி பணம் கேட்டு என்னை சித்ரவதை செய்து வருகிறார். இதுவரை எனது குடும்பத்திடம் இருந்து ₹25 லட்சம் வரை வாங்கி கொடுத்து விட்டேன்.

ஆனால் திரும்ப, திரும்ப பணம் கேட்டு அடித்து சித்ரவதை செய்கிறார்’ என்றார். இதையடுத்து சுபாஷினியிடம் புகாரை பெற்று வேல்முருகன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: