திருக்குறுங்குடியில் சாலையோரம் எரிக்கப்படும் குப்பையால் புகை மண்டலம்-வாகன ஓட்டிகள் தவிப்பு

களக்காடு : திருக்குறுங்குடியில் சாலையோரம் எரிக்கப்படும் குப்பைகளால் புகை மண்டலம் சூழ்ந்து, அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

களக்காடு அருகே திருக்குறுங்குடி பெரியகுளத்தின் கரையில் உள்ள சாலை நாகர்கோவில்-தென்காசி பிரதான சாலை ஆகும். இந்த சாலையின் வழியாக தென்காசி, பாபநாசம், அம்பை, கடையம், சேரன்மகாதேவி, களக்காடு, வள்ளியூர், நாகர்கோவில் செல்லும் பஸ்கள், வாகனங்கள் சென்று வருகின்றன.

எப்போதும் வாகன போக்குவரத்து காணப்படும் பிசியான சாலை ஆகும். இந்நிலையில் சமீபகாலமாக இந்த சாலையோரங்களில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். குப்பைகள் அதிகளவில் சேர்ந்ததும் அதற்கு தீயும் வைத்து விடுகின்றனர். இந்த தீயினால் அப்பகுதியில் புகை மண்டலம் எழுந்து சாலையை மூடுவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பகலில் மட்டுமின்றி சில நேரங்களில் இரவிலும் தீ வைப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இருள் சூழ்ந்த நிலையில் தீயினால் புகை மண்டலம் ஏற்படுவதால் அப்பகுதியை கடப்பதற்குள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். புகையினால் மூச்சு தினறல் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். எனவே திருக்குறுங்குடி பேரூராட்சி நிர்வாகத்தினரும், போலீசாரும் அப்பகுதியில் குப்பைகளை கொட்டி தீ வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: