தேரூர் குளங்களில் உடைந்து சேதமடைந்த மதகு, மடைகள் ரூ.85 லட்சத்தில் சீரமைப்பு-அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு

நாகர்கோவில் :  குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பபூ என இருபோக சாகுபடி நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் சுமார் 6500 ஹெக்டேர் பரப்பளவில் இந்த நெல்சாகுபடி நடக்கிறது. இந்த வயல்பரப்புகள் பாசனத்திற்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை நம்பியே உள்ளது. தேரூர், பறக்கை, சுசீந்திரம், வேம்பனூர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள வயல்பரப்புகள், அணைகளில் இருந்து கிடைக்கும் தண்ணீரை குளங்களில் நிரப்பி வைத்து குளத்து பாசன வசதியை பெற்று வருகின்றன. இதுபோல் குறைந்த பரப்பளவு உள்ள வயல்களும் குளத்து பாசன வசதியை பெற்று வருகிறது.

தேரூரில் உள்ள 1200 ஏக்கர் விவசாய நிலம் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் உள்ள தேரூர் குளங்களை நம்பி உள்ளது. தேரூரில் உள்ள வயல்பரப்புகள் நீர் ஆதாரத்தை பெறும் வகையில், தேரூர் மேற்கு குளத்தில் ஈஞ்சனமடை, முத்துணிமடை, பெரும்பிடிமடை, பெரியமடை என 4 மடைகள் உள்ளன.இதுபோல் தேரூர் கீழ் குளத்தில் வாணியமடை, சுருளிமடை, புளியமடை, கோணமடை, சேனீர்மடை என 5 மடைகள் உள்ளன. மேலும் குளத்தின் மறுகாலும் உள்ளது. அனைத்து மடைகளுக்கும் மதகுகளும் உள்ளன. இந்த குளம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், போதிய பராமரிப்பு இல்லாமல், அனைத்து மடைகளும், மதகுகளும் பழுதாகியுள்ளது.

தேரூரில் உள்ள வயல்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் போது சில மடைகளில் தண்ணீர் அதிகளவும், சில மடைகளில் தண்ணீர் குறைவாகவும் பாய்கிறது. இதனால் தேரூர் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து தேரூர் குளத்தின் நீரினை பயன்படுத்தும் சங்கத்தினர் கூறியதாவது: தேரூரில் 1200 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. வயல்களில் வால்நெல் முளைப்பதால், கடந்த கும்பப்பூ, தற்போது நடந்து வரும் கன்னிப்பூ ஆகிய பருவ சாகுபடியை விவசாயிகள் புறக்கணித்துள்ளனர். இந்த வயல்கள் தேரூர் குளத்தை நம்பியே உள்ளது.

இந்த குளங்களில் உள்ள 9 மடைகள் அடைபட்டும், மதகுகள் செயல்படாமலும் உள்ளன. மேலும் குளத்தின் மறுகாலில் உள்ள 3வது மதகு உடைந்து காணப்படுகிறது.

குளத்தில் உள்ள தண்ணீர் வெளியேறுவதை தடுக்கும் வகையில் மணல் மூடைகளை கொண்டு அடைத்து வைத்துள்ளோம். மடைகள், மறுகால் பாயும் பகுதிகள் முறையாக பராமரிக்காததால், பருவமழை பெய்யும் போது பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தேரூர் குளங்கள் உடைந்து வருகிறது. மடை, மதகுகளை சரிசெய்ய விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளோம்.

தற்போது தேரூர் குளத்தின் மேற்கு குளத்திற்கும், கீழ் குளத்திற்கும் இடையே உள்ள சாலையில் இரு பகுதியில் பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் குளத்தில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. இதனை பயன்படுத்தி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மடை, மதகுகளை சரிசெய்ய வேண்டும் என்றனர்.

இது குறித்து பொதுப்பணித்துறை  அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, தேரூர் குளங்களில் உடைந்து கிடக்கும் மதகு, மடைகளை  சீரமைப்பு செய்வது தொடர்பாக ரூ.85 லட்சம் நிதி ஒதுக்க அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். அரசிடம்  இருந்து அனுமதி கிடைத்து, நிதி ஒதுக்கியதும் அதற்கான பணி செய்யப்படும் என்றார்.

Related Stories: