100 சதவீதம் மானியத்தில் மின்மோட்டாருடன் நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்

ராமநாதபுரம் :  ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு: தமிழகத்தில் பாசன நீர் ஆதாரங்களை புதிதாக உருவாக்கி அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் அதிக விளைச்சல் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து 2022-23ம் ஆண்டில் ரூ.12 கோடி செலவில் மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்துத் தரப்படும் என வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேரவையில் அறிவித்தார். இதன்படி, தமிழகத்தின் 8 மாவட்டங்களில் பாசன நீர் வசதி இல்லாத இடங்களில் 200 சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், திட்டம் தயாரிக்கப்பட்டு, நிலத்தடி நீர் பாதுகாப்பான குறு வட்டங்களில் வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்த தமிழக அரசு மார்ச் 9ல் ஆணை பிறப்பித்தது.  

ராமநாதபுரம் மாவட்டத்தில் 49 பாதுகாப்பான குறு வட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அரசு வெளியிட்ட ஆணைப்படி, 90 மீட்டர் ஆழம் உள்ள குழாய் கிணறு அமைக்கவும் 100 மீட்டர் ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அமைக்கவும் அதிகபட்சமாக ரூ.3 லட்சம், மின் சக்தி மூலம் இயங்கும் 5 குதிரைத் திறன் கொண்ட பம்பு செட்கள் அமைக்க ரூ.75 ஆயிரம், நீர் விநியோக குழாய்கள் அமைக்க ரூ.20 ஆயிரம் உச்ச வரம்பு தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின் சக்தி மூலம் இயங்கக்கூடிய இடங்களுக்கு மின்சார இணைப்புக்கான கட்டமைப்புகள் அமைக்க ரூ.2.50 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த ஆழத்திற்கும் அதிகமாக கிணறு அமைக்க வேண்டும் என்றாலோ அல்லது கூடுதல் குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்கள் நிறுவ வேண்டும் என்றாலோ, அதற்கான கூடுதல் செலவை விவசாயிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சிறு, குறு ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகள் இத்திட்டத்தை பயன்படுத்த சிறு, குறு விவசாயி சான்றிதழ், அடங்கல், 10-1, நிலவரை படம், ஆதார் அட்டை நகல், புகைப்படம், சாதிச்சான்று நகல் ஆகிய விபரங்களுடன், ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை வட்டார விவசாயிகள் ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை), ராமநாதபுரம் அலுவலகத்திலும் (கைபேசி எண்: 98659 67063), பரமக்குடி, நயினார்கோவில், முதுகுளத்தூர், போகலூர், கமுதி, கடலாடி வட்டார விவசாயிகள் பரமக்குடி உதவி செயற்பொறியாளர்(வே.பொ), பரமக்குடி அலுவலகத்திலும் (கைபேசி எண்: 75029 79158), ராமநாதபுரம் வேளாண் இணை இயக்குநர் அலுவலக செயற்பொறியாளர் (வே.பொ), ராமநாதபுரம் (கைபேசி எண். 9443157710) அலுவலகத்திலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: