கடலாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு-அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதி

சாயல்குடி :  கடலாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

கடலாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடலாடி, மேலக்கடலாடி, கடலாடி இந்திராநகர், கருங்குளம் இந்திராநகர், கே.கரிசல்குளம் ஆகிய பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 137 பேர் படிக்கின்றனர். பள்ளியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்களிடம் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கருத்து கேட்டு ஆய்வு செய்தனர்.

கடலாடி யூனியன் மண்டல அலுவலர் பழனி, பி.டி.ஓ ராஜா ஆகியோர் பள்ளியில்  ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது பெற்றோர் கூறும்போது, பள்ளியில் ஆண்டுக்காண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தற்போது பயன்பாட்டில் உள்ள ஒரு கழிப்பறை போதுமனதாக இல்லை. எனவே கூடுதலாக மாணவர், மாணவிகளுக்காக தனித்தனி கழிவறைகள் கட்டி தரவேண்டும். சேதமடைந்த பழைய கட்டிடங்களை அகற்ற வேண்டும், பள்ளி வகுப்பறை கட்டிடங்களின் தரைத்தளங்கள் சேதமடைந்துள்ளன.

அதனை சீரமைத்து தரவேண்டும். மேலும் அங்கன்வாடி மையம் காவல்நிலையம் அருகே கருங்குளம் பகுதியில் இருப்பதால் சிறு குழந்தைகள் அங்கு சென்று படிக்க முடியவில்லை, போக்குவரத்து மிகுந்த முதுகுளத்தூர்-சாயல்குடி சாலை மார்க்கத்தில் அமைந்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த வளாகத்திற்குள்ளேயே புதிய அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்தனர்.

பி.டி.ஓ ராஜா கூறும்போது, சேதமடைந்த நிலையிலுள்ள பழைய சமையல்கூடம், பழைய கழிப்பறை கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்படும், யூனியன் சார்பில் புதிய கழிப்பறை கட்டப்படும்,  வகுப்பறைகளில் தரைத்தளம் சீரமைத்து தரப்படும் என உறுதியளித்தார். ஆய்வின் போது தலைமையாசிரியர் சற்பிரசாதமேரி, பஞ்சாயத்து செயலர் முனீஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: