“திரௌபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார்?” என ட்விட்டரில் பதிவிட்ட இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு

டெல்லி : “திரௌபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார்?” என ட்விட்டரில் பதிவிட்ட இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பாஜ தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வரும் இயக்குனர் ராம் கோபால் வர்மா, தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்டுள்ளார். அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் “திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் இதில் பாண்டவர்கள் யார்? மேலும் முக்கியமாக, கௌரவர்கள் யார்?” என்று அவர் பதிவிட்டு இருந்தார்.

ராம் கோபாலின் இந்த ட்விட்டர் பதிவு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது. இதைத் தொடர்ந்து தமது ட்விட்டர் பதிவு குறித்து விளக்கம் அளித்த ராம்கோபால் வர்மா, மகாபாரதத்தில் திரெளபதி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அந்த பெயர் மிகவும் அபூர்வமானது. ஆகையால் அதனோடு தொடர்புடைய கதாபாத்திரங்களை நினைவுபடுத்திப் பார்த்தேன். யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அதனை பதிவிடவில்லை, என விளக்கம் அளித்தார். ஆனாலும் ராம்கோபால் வர்மாவின் இந்த பதிவுக்கு எதிராக பல இடங்களில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் கோல்வாலியில் மனோஜ் சின்ஹா என்பவர் வர்மாவுக்கு எதிராக புகாரளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், உ.பி. போலீசார், திரெளபதி முர்மா தொடர்பான ட்வீட்டுக்காக ராம்கோபால் வர்மா மீது ஐடி சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: