சாத்தான்குளம், உடன்குடி, தட்டார்மடம் பகுதியில் முருங்கை பயிரிட விவசாயிகள் ஆர்வம்

*ஆண்டு முழுவதும் வருவாய்

* கனடா, மலேசியாவுக்கும் பறக்கிறது

சாத்தான்குளம் : சாத்தான்குளம் தாலுகா பகுதி, வானம் பார்த்த பூமி. இப்பகுதியில் கிணற்று பாசனம் மூலம் மழை காலத்தில் தேங்கும் குளத்து தண்ணீரை கொண்டும் விவசாயம் நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மழையளவு வெகுவாக குறைந்து போனதால் சொட்டுநீர் பாசனம் மூலமும், கிணற்றில் கிடைக்கும் நீரை கொண்டும் விவசாயம் பார்த்து வருகின்றனர். இந்த பகுதியில் நெல், கடலை, வாழை மற்றும் பருத்தி, சோளம் பயிரிடுவது வாடிக்கையாக இருந்த நிலையில், சமீபகாலமாக முருங்கைக்காய்க்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் தரிசு நிலங்களை சீர்செய்து  முருங்கை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு வகையான முருங்கைகள் பயிரிடப்படுகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கி நவம்பர் வரை 6 மாத காலம் முருங்கை சீசனாகும். இங்கு விளையும் முருங்கை காய்களை தட்டார்மடம், போலையார்புரம், முதலூர், உடன்குடி, திசையன்விளை பகுதியில் கமிஷன் மண்டி அமைத்து  விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வெளியிடங்களுக்கு அனுப்புகின்றனர். முருங்கையின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி திருவனந்தபுரம், பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற மாநிலங்களுக்கும் இங்கிருந்து முருங்கை காய்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் கனடா, மலேசியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது.

சீசன் காலங்களில் தேனி, ஒட்டன்சத்திரம் பகுதியில் முருங்கை வரத்து குறைவாக இருந்தால் சாத்தான்குளம் பகுதி முருங்கைக்கு நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். முருங்கை காய் சீசன்  6 மாதம் என்றாலும் ஆண்டு முழுவதும் கிடைப்பதால் நல்ல வருவாய் கிடைக்கிறது. இதனால்  மற்ற  பயிர்களை  பயிரிடுவதில் ஆர்வத்தை குறைத்து முருங்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். சில இடங்களில் முருங்கைக் காயை ஊடுபயிராகவும் விவசாயிகள் செய்து  வருகின்றனர்.  

இதுகுறித்து விவசாயி பாலமுருகன் கூறுகையில், தற்போது இப்பகுதி முருங்கைக்கு நல்ல விலை கிடைக்கிறது. இங்குள்ள முருங்கைகள் திருவனந்தபுரம், திருச்சி, கொச்சி விமான நிலையம் கொண்டு சென்றுதான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதுவே தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றி தூத்துக்குடியில் இருந்து முருங்கைகளை ஏற்றுமதி செய்யும் வகையில் ஏற்பாடு செய்தால் மிகவும் எளிதாக விவசாயிகள் பயன்பெறுவர். போக்குவரத்து செலவும் குறையும், என்றார்.

‘‘முருங்கை பவுடர் தயாரிக்கும் திட்டம்

இதுகுறித்து சாஸ்தாவிநல்லூர் விவசாய நலச்சங்க தலைவர் எட்வின்காமராஜ், செயலாளர் லூர்துமணி கூறுகையில், முருங்கையை பவுடர் செய்து ஏற்றுமதி செய்தால் அதில் விவசாயிகளுக்கு  கூடுதல்  வருவாய் கிடைக்கும் நிலை உள்ளது. விலை குறைவால் நஷ்டமடையும் விவசாயிகளுக்கு இது ஆறுதலாக அமையும். அரசு சார்பில்  முருங்கை ஏற்றுமதி அதிகரிக்கப்படும் எனவும், பவுடர் தயாரிக்கும் திட்டமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் பயன்பெறும் வகையில் அதனை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுதோறும்  முருங்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மானிய கடனுதவி  வங்கி மூலம் வழங்கிட வேண்டும், என்றனர்.‘‘சீசன் காலங்களில் தேனி, ஒட்டன்சத்திரம்  பகுதியில் முருங்கை வரத்து குறைவாக இருப்பதால் சாத்தான்குளம் பகுதி  முருங்கைக்கு நல்ல விலை கிடைக்கிறது

Related Stories: