ஏரல் அருகே சக இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக அழிந்து வரும் பனை தொழிலில் களமிறங்கிய கல்லூரி மாணவன்-பெற்றோரின் பாரத்தை குறைப்பதால் மனநிறைவு

ஏரல் : ஏரல் அருகே குடும்ப வறுமையின் காரணமாக பனைமரம் ஏறி பதநீர் எடுத்து சம்பாதித்து கல்லூரியில் படித்து வருகிறார் ஒரு மாணவன். அழிந்து வரும் பனை தொழிலை காப்பாற்ற களமிறங்கிய அந்த மாணவனை ஊர் மக்கள் பாராட்டினர்.மிகவும் பின்தங்கிய பொருளாதார  சூழ்நிலையில் உள்ள பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியறிவு  கிடைக்க வேண்டும் என்பதற்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்கின்றனர்.  ஆனாலும் கல்விக்கு ஆகும் செலவை சமாளிக்க முடியாமல் அவர்கள் படும் சிரமம்  அளவிட முடியாதது.

அதைகண்டு உணரும் நிலைக்கு உயரும் இளைஞர்கள் பலர் தற்போது  பகுதி நேரமாக வேலை பார்த்துக்கொண்டே படிப்பது என்ற நிலைக்கு மாறி  வருகின்றனர். நகர்ப்புறம் சார்ந்த பகுதிகளில்  இதுபோன்ற பணிகள் கிடைப்பது எளிது. ஆனால் ஏராளமான கிராமங்கள் நிறைந்த நெல்லை,  தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இதுபோன்ற  வாய்ப்புகள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால் தான் வாழும் பகுதியிலேயே  இதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதே புத்திசாலித்தனம் என்பதால் அதை  சரியாக திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார் ஏரலைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மாரி செல்வன்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே பண்டாரவிளை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி (51). விவசாயியான இவர் தனது வயலில் நெல் பயிரிட்டுள்ளார். இவருக்கு அன்னலெட்சுமி (45) என்ற மனைவியும், 3 மகன், 2 மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் விக்னேஷ்நாதன் (25) டிப்ளமோ படித்து விட்டு நட்டாத்தியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். 2வது மகன் நந்த குருநாதன் (23) தூத்துக்குடி பாலிடெக்னிக்கில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மூன்றாவது மகன் மாரிசெல்வன் (19) சாயர்புரம் போப் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ. பொருளாதாரம் படித்து வருகிறார். 4வது மகள் பவதாரணி (15) பண்ணைவிளை தக்கர் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பும், 5வது மகள் சுஜேதரிசனி (13) பண்டாரவிளை பள்ளியில் 9ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா ஊரடங்கு காரணமாக  குடும்ப செலவுக்கு வழியின்றி பழனிச்சாமி சிரமப்பட்டார். தொடர்ந்து விவசாயமும் பெரியளவில் கைகொடுக்காததால் வறுமை வாட்டியது. குடும்பம் வறுமையில் வாடினாலும் பிள்ளைகளின் படிப்பு எந்தவிதத்திலும் பாதிக்கக் கூடாது என்பதில் பழனிசாமி உறுதியாக இருந்தார். அப்போது வீட்டில் இருந்து வந்த மாணவன் மாரிசெல்வன் தந்தைக்கு உதவியாக வேலைபார்த்துக் கொண்டே படிப்பது என்ற முடிவுக்கு வந்தார்.

பழனிசாமிக்கு சொந்தமான இடத்தில் ஏராளமான பனைமரங்கள் உள்ளன. ஆனால் மரம் ஏற போதிய பணியாளர்கள் கிடைக்காமலிருந்தது. இதனால் நண்பர்கள் உதவியுடன் சிரமப்பட்டு பனைமரம் ஏற கற்றுக் கொண்டார். தினமும் காலை 4 மணிக்கு எழுந்து தோட்டத்திற்கு சென்று பனைமரம் ஏறி பதநீர் இறக்குகிறார். பதனீரை பிளாஸ்டிக் குடத்தில் ஊற்றி வீட்டுக்கு கொண்டு செல்கிறார். அதன்பின் கல்லூரிக்கு புறப்பட்டு செல்கிறார்.

இதுகுறித்து மாரிசெல்வன் கூறுகையில், ‘எங்கள் குடும்பம் பெரியது. என்  தந்தைக்கு விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காத நிலையில் பெரிய அண்ணனின்  வருமானம் சிறிது உதவுகிறது. வறுமையான நிலையிலும் எங்கள் அனைவரையும் நன்றாக  படிக்க வைக்க வேண்டுமென்பதே எனது பெற்றோரின் கனவு. எனவே அவர்களின் கனவை  நனவாக்கவும், அவர்களின் பாரத்தை குறைக்கவும் நம்மால் முடிந்ததைச் செய்வோம்  என்ற எண்ணம் ஏற்பட்டது. இதையடுத்து என்ன வேலைக்குச் செல்லலாம் என்று  யோசித்தபோது, எங்கள் தோட்டத்திலேயே ஏராளமான பனைமரங்கள் இருப்பது நினைவுக்கு  வந்தது. தற்போதைய காலத்தில் பனைமரம் ஏற போதியளவு தொழிலாளர்கள்  கிடைப்பதில்லை. எனவே நாமே பனைமரம் ஏறி பழகுவோம் என்று நினைத்தேன்.

இதற்காக  நண்பர்கள் உதவியுடன் பனை மரம் ஏறி பழகிய பின்பு, பெரியவர்களிடம் பனை  மரத்திலிருந்து பதநீர், நுங்கு போன்றவற்றை சேகரிப்பது எப்படி என  கேட்டறிந்தேன். பதநீர் எல்லா காலங்களிலும் கிடைப்பதில்லை. சீசன் காலத்தில்  மட்டுமே கிடைக்கும் என்பதால் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள முடிவு  செய்தேன். தினமும் காலை 4 மணிக்கு எழுந்து தோட்டத்திற்கு செல்வேன். ஒரு  நாளைக்கு என்னால் 16 பனைமரம் ஏற முடிகிறது.

மரங்களில் ஏறி கலயங்களில்  சேர்ந்துள்ள பதநீரை இறக்கி எனது பெற்றோரிடம் வழங்கி விட்டு, கல்லூரிக்கு  புறப்பட்டுச் செல்கிறேன். மாலையில் திரும்பி வந்ததும் மீண்டும் பனை ஏறி  புதிய பாளைகளை சீவி விட்டு கலயங்களை கட்டி விட்டு வருவேன். தினமும் இரண்டு  குடம் பதநீர் கிடைக்கிறது. ஒரு குடம் சுமார் ரூ.700 வரை விற்பனையாகிறது.  இதிலிருந்து கிடைக்கும் பணம் எங்கள் குடும்ப செலவிற்கு உதவுவதோடு,  எனக்கும், எனது சகோதர சகோதரிகளின் படிப்பு செலவிற்கும் பயன்படுகிறது.  இதனால் என்னால் முடிந்த அளவு எனது பெற்றோரின் சுமையை குறைத்துள்ளதாக  மன நிறைவு ஏற்பட்டுள்ளது என்றார்.

இதுகுறித்து பண்டாரவிளை எலும்பு முறிவு வைத்தியர் சிவக்குமார் கூறியதாவது: பண்டாரவிளை என்றாலே நினைவுக்கு வருவது எலும்பு முறிவு வைத்தியம் தான். இங்கு தலைமுறை, தலைமுறையாக பனைத் தொழிலில் பல குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல் எங்கள் ஊரில் ஆயிரக்கணக்கான பனைமரங்கள் உள்ளது. முன்பு முக்கிய தொழிலாக இங்கு பனைமரத்தில் இருந்து பதநீர் எடுத்து கருப்பட்டி தயாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பனைமரம் ஏற ஆள் கிடைப்பதில்லை. இதனால் இத்தொழில் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வரும் நிலையில் மாணவன் மாரிசெல்வன் சிறிய வயதிலேயே பனைமரம் ஏறி தொழில் செய்து கல்லூரியிலும் படித்து வருவது நல்ல முன்னுதாரணம் என்றார்.

Related Stories: