நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட வளாக விரிவாக்கம், மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.50 லட்சம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (28.6.2022) தலைமைச் செயலகத்தில், நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட வளாக விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப்  பணிகளுக்காகத்  தமிழ்நாடு அரசின் நிதியுதவியாக 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் திரு. வ.ரெ.போ. கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம்  வழங்கினார்.  

இவ்வரசு பொறுப்பேற்றதும், முடிவுறாமல் இருந்த நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின்  கட்டட விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூபாய் 25 இலட்சம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 10.12.2021  அன்று வழங்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து கட்டடப் பணிகளை முடித்திட கூடுதல் தொகைக்காக விடுக்கப்பட்ட கோரிக்கையினை   ஏற்று,   கட்டடப் பணிகளுக்காக மேலும் 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலை இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது.   அவ்வகையில், நவிமும்பைத் தமிழ்ச் சங்கக் கட்டட விரிவாக்கம் மற்றும்  மேம்பாட்டுப் பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் சார்பாக மொத்தம்  ரூபாய்

1 கோடியே 25 இலட்சம்  நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.   

இந்நிகழ்ச்சியில்  மாண்புமிகு தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல்  துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்  துறை அரசு செயலாளர் திரு. மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந. அருள்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories: