மதுரை : ஐகோர்ட் மதுரை கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த லோக் அதாலத்தில் 5,388 வழக்குகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் பயனாளிகளுக்கு ரூ.22 கோடியே 46 லட்சத்து 66 ஆயிரத்து 599 வழங்கப்பட்டது. ஐகோர்ட் மதுரை கிளையில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடந்தது. இதில் இன்சூரன்ஸ் வழக்குகள், தனிநபர் வழக்குகள், அப்பீல் மனுக்கள் என மொத்தம் 343 வழக்குகள் சுமூக தீர்வு காண்பதற்கான பட்டியலிடப்பட்டன.
இவ்வழக்குகளை ஐகோர்ட் நீதிபதி ஸ்ரீமதி, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதிகள் சொக்கலிங்கம், கிருஷ்ணவள்ளி ஆகியோர் தலைமையில் 3 தனித்தனி குழுக்கள் விசாரித்தன. 34 வழக்குகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 45 லட்சத்து 10 ஆயிரத்து 960 வழங்கப்பட்டது.இதேபோல், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில், மாவட்ட முதன்மை நீதிபதி வடமலை தலைமையில் லோக் அதாலத் நடந்தது. இதில் மொத்தம் 9,364 வழக்குகள் சுமூக தீர்வு காண்பதற்காக பட்டியலிடப்பட்டன. இவ்வழக்குகளை நீதிபதிகள் தலைமையில் வக்கீல்கள், சமூக சேவகர்கள் அடங்கிய குழுவினர் விசாரித்தனர். 5,354 வழக்குகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.20 கோடியே ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 639 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு நான்கு வழிச்சாலையில் நடந்த கார் விபத்தில் விருதுநகரை சேர்ந்த மின்வாரிய ஊழியர் விஜயன் இறந்தார். இவ்விபத்து வழக்கில் இழப்பீடு கேட்டு மதுரை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கு விசாரணை முடிவில், அவரது குடும்பத்தினருக்கு ரூ.70 லட்சம் இழப்பீட்டு தொகைக்கான காசோலை, மக்கள் நீதிமன்றத்தின் மூலம் மாவட்ட முதன்மை நீதிபதி வடமலை, தொழிலாளர் கோர்ட் நீதிபதி முத்துசாரதா ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.