அடி, உதை, ரத்தம்... எடப்பாடி ஆதரவாளர் மீது சரமாரி தாக்குதல்... ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!!

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை ராய்ப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் தலைமையில் பொதுக்குழு தீர்மானக்குழு கூட்டம் நடந்தது.

அப்போது, தலைமை வளாகத்தில் கூடி இருந்த அதிமுக தொண்டர்கள், கூட்டத்திற்கு பங்கேற்க வந்த ஜெயக்குமாருக்கு எதிராக கோஷம் எழுப்பி, அவரை முற்றுகையிட முயன்றனர். ஆனாலும், அதிமுக நிர்வாகிகள் சிலர் அவரை பாதுகாப்பாக கட்சி அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர். கட்சி அலுவலகத்திற்குள் ஜெயக்குமாரை விட்டுவிட்டு வெளியே வந்த எடப்பாடி ஆதரவாளர் ஒருவரை அதிமுக தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு தர்மஅடி கொடுத்தனர். அவரது வாயிலும், மூக்கிலும் இருந்து ரத்தம் கொட்டியது. ரத்தம் சொட்ட சொட்ட வெளியே வந்த, அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘ஜெயக்குமாரை கட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்திற்குள் விட்டுவிட்டு வெளியே வந்தேன். அப்போது, ‘நீ எடப்பாடி ஆதரவாளரா?’ என் கேட்டு அடித்தனர். அதிமுக கட்சி அலுவலகத்தில் ஏராளமான ரவுடிகள் உள்ளனர்’ என்றார். பின்னர் அவரை அங்கிருந்த சிலர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். விசாரணையில், அவரது பெயர் மாரிமுத்து, சென்னை பெரம்பூர் பகுதி முன்னாள் செயலாளர் என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து பெரம்பூர் பகுதி அதிமுக நிர்வாகியும், எடப்பாடி ஆதரவாளருமான மாரிமுத்து, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், ராயப்பேட்டை போலீசார், ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கலவரங்களை ஏற்படுத்துதல், ஆயுதங்களை கொண்டு தாக்குதல், ஆபாசமாக பேசுதல், தானாக முன்வந்து தாக்குதலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குபதியப்பட்டுள்ளது.

Related Stories: