மத உணர்வை தூண்டியதாக பத்திரிகையாளர் கைது... உண்மையின் ஒரு குரலை கைது செய்வது இன்னும் 1000 குரல்களை எழுப்பும் என ராகுல் கண்டனம்!!

டெல்லி : 2018ம் ஆண்டு ட்விட்டரில் பதிவிட்ட கருத்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி பத்திரிகையாளர் முகமது ஜுபைர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆல்ட் நியூஸ் என்ற உண்மை சரிபார்ப்பு இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர் 2018ம் ஆண்டு ஒரு குறிப்பிட்ட மதத்தின் வேண்டுமென்றே அவமதிக்கும் வகையில் ட்வீட் செய்ததாக குற்றம் சாட்டி டெல்லி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த புகாரின் பேரில் தற்போது டெல்லி போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முகமது ஜுபைரை நேற்று கைது செய்த டெல்லி போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி நீதிமன்றத்தில் நேற்று மாலை முகமது ஜுபைரை ஆஜர்படுத்தி ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்கவும் டெல்லி போலீஸ் அனுமதி பெற்றது. இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மோடி அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜகவின் மத வெறுப்பு கொள்கையை வெளிப்படுத்தும் நபர் கைது நடவடிக்கைக்கு ஆளாக்கப்படுவார் என்பது புலப்பட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார். உண்மையின் ஒரு குரலை கைது செய்வது இன்னும் ஆயிரம் குரல்களை எழுப்பும் என்று ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மொய்த்ராவும் முகத்து ஜுபைர் கைது நடவடிக்கையை கண்டித்துள்ளார். மத உணர்வுகளை இழிவுப்படுத்திய நுபுர் ஷர்மாவுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்ட நிலையில், அது போன்ற குற்றச்சாட்டில் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டு இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.

Related Stories: