தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் கட்டிட கழிவுகள் அகற்றம்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 70 வார்டுகளில் உள்ள பெரும்பாலான தெருக்களில் கட்டிட கழிவு, மரக்கழிவு குப்பை கழிவுகளையும் தொடர்ந்து கொட்டிவருவதால் மலைபோல் குவிந்திருந்தது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது. எனவே, இதனை சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் இதுகுறித்து நமது தினகரன் நாளிதழில் படங்களுடன் விரிவான செய்தி நேற்று வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இதன் எதிரொலியாக நேற்று காலை முதல் மாநகராட்சி அதிகாரிகள் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே இருந்த கட்டிட கழிவுகள், மரக்கழிவுகள், குப்பை கழிவுகள் என அனைத்தையும் அகற்றினர். மேலும் மீண்டும் இதுபோன்ற கட்டிட கழிவுகள், மரக்கழிவுகள், குப்பை கழிவுகளை சாலைகளில் கொட்டினால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், `என் நகரம், என் பெருமை, என் குப்பை, என் பொறுப்பு’ என்ற உணர்வோடு பொது இடங்களில் குப்பைகள் போடுவதை தடுத்திடவும், குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என 100 சதவீதம் பிரித்து வழங்கிடவும், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டுமென பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: