பாகிஸ்தானில் இருந்து எல்லையில் ஊடுருவியவர் சுட்டுக்கொலை

ஜம்மு:  ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லையில் ஊடுருவியவரை எல்லைப்பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். ஜம்மு காஷ்மீரில் வரும் 30ம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்குவதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஜம்மு மாவட்டத்தில் சர்வதேச எல்லைப்பகுதியில் எல்லைப்பாதுகாப்பு படையினர் நேற்று காலை வழக்கம் போல் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருந்து சர்வதேச எல்லையின் தடுப்புவேலி வழியாக ஒருவர் இந்திய பகுதிக்குள் ஊடுருவுவதற்கு முயன்றார். பாதுகாப்பு படையினர் எச்சரித்தும் அந்த நபர் தொடர்ந்து முன்னேறினார்.

இதனை தொடர்ந்து வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அந்த நபர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இதற்கிடையே, குல்காம் மாவட்டம் டுரிப்ஜி பகுதியில் நேற்று பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதே போல, தோடா மாவட்டத்துக்குட்பட்ட தோடா நகரில் துப்பாக்கி, வெடிப்பொருட்கள், தோட்டாக்களுடன் தீவிரவாதி ஒருவன் போலீசில் பிடிபட்டான். விசாரணையில் அந்த நபர் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பின் வழிகாட்டுதலின்பேரில் மாவட்டத்தில் போலீசார் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நபர் கோடி கிராமத்தை சேர்ந்த பரீத் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Related Stories: