கூடுவாஞ்சேரியில் ரயில்வே சுரங்கப்பாதை திறப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி

கூடுவாஞ்சேரி: தினகரன் செய்தி எதிரொலியால், கூடுவாஞ்சேரியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை சீரமைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி ரயில்வே சுரங்கப்பாதை கட்டும் பணி கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 2021ம் ஆண்டு முடிக்கப்பட்டது. இந்த ரயில்வே சுரங்கப்பாதை வழியாக நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட 1, 2 மற்றும் 8வது வார்டுகளில் உள்ள அருள் நகர், யமுனா நகர், கங்கா நகர், எம்.ஜி.நகர், சிற்பி நகர், இதேபோல் ஆதனூர், டிடிசி நகர், மாடம்பாக்கம், குத்தனூர், ஒரத்தூர், நீலமங்கலம், தைலாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரும் பள்ளி மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அன்றாடம் வேலைக்கு சென்று வருபவர்கள் இந்த வழியாக தான் எளிதில் சென்று வர வேண்டும். இந்நிலையில், சுரங்கப்பாதை கட்டப்பட்டு ஓராண்டாகியும் இன்னும் திறக்கவில்லை.

இதில், மழை காலங்களில், மழை பெய்யும் போதெல்லாம் சுரங்கப்பாதையில் தண்ணீர் குளம்போல் தேங்குகிறது. மேலும், கோடை காலங்களிலும் அதில் தண்ணீர் ஊற்று சுரந்துகொண்டே இருக்கிறது. இதனால் எந்நேரமும், அதில் தண்ணீர் தேங்கியே காணப்படும். இதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுரங்க பாதை திறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், சுரங்கப்பாதையில் தண்ணீர் சுரந்து கொண்டே இருப்பதால் திறப்பு விழா தள்ளிப்போனது. தற்போது, கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் மேற்படி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பல முறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. இதனால், எளிதில் சென்று வர வேண்டிய அனைத்து தரப்பு பொதுமக்களும் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று சுற்றி வர வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. எனவே, இனியாவது இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் சுரங்கப்பாதை திறக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.  

இந்நிலையில், தினகரன் நாளிதழில்  கடந்த 22ம் தேதி படத்துடன் கூடிய செய்தி வெளியிடப்பட்டது.  அதன் எதிரொலியாக சுரங்கப்பாதை சீரமைக்கப்பட்டு, நேற்று காலை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள்,  பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: