கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேருபவர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 31 சதவீதம் அதிகரிப்பு

சென்னை: தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் சேருவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 2022-23ம் கல்வியாண்டில் ஆண்டில் 31% அதிகரித்துள்ளது. பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கிய பிரிவினர் தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் சேர்க்கை பெறும் விதத்தில் கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதன்படி கொரோனா தொற்றுக்கு முந்தய 2019-20 கல்வியாண்டில் 76,927 மாணவர்கள் நுழைவு நிலை வகுப்புகளில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு தனியார் பள்ளிகளில்  எல்.கே.ஜி மற்றும் முதலாம் வகுப்பில் ஒதுக்கப்பட்ட 25% இடங்களின் கீழ் 56,687 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் 2022-23 கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 74,283 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 31% அதிகமாகும்.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 8,234 தனியார் பள்ளிகளில் மொத்தம் உள்ள 94,000 இடங்களுக்கு, இந்த ஆண்டு 1,42 லட்சம் விண்ணப்பதாரர்களிடமிருந்து மூன்று லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்களைப் பெறப்பட்டுள்ளது. கிராமப்புற பள்ளிகளை விட மாநகர் மற்றும் நகர்ப்புற தனியார் பள்ளிகள் அதிக விண்ணப்பங்களை ஈர்த்துள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: