510 உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்புவதற்கான தற்செயல் தேர்தல் ஜூலை 9ம் தேதி நடைபெறுவதை அடுத்து இன்று வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு தற்செயல் தேர்தல்களை நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது. அதன்படி, 498 ஊரக உள்ளாட்சிப்  பதவியிடங்களுக்கும், 12 நகர்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு என மொத்தம் 510 பதவியிடங்களுக்கு ஜூலை 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிப்பை கடந்த 20ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இதற்காக கடந்த 20ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கியது. மாநகராட்சி வார்டு உறுப்பினருக்கு  காஞ்சிபுரம் மாநகராட்சி வார்டு எண் 36, ஊராட்சி ஒன்றிய வார்டு  உறுப்பினருக்கு செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 10, மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 15க்கும் தற்செயல்  தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் தாக்கல் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, இன்று வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை காலை 10 மணி முதல் நடைபெறுகிறது.

Related Stories: