கலைஞரின் அரசாணை 354ஐ உடனே செயல்படுத்த வேண்டும்: சட்டப்போராட்ட குழு கோரிக்கை

சென்னை: கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்படாத கலைஞரின் அரசாணை 354 ஐ  தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்  என அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்ட குழு வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் முதன்முதலாக கலைஞர் ஆட்சியில்தான் அரசு மருத்துவர்களுக்கு,   காலம் சார்ந்த ஊதியம் தரப்பட்டது. மருத்துவர்களின் கடினமான, நீண்டகால படிப்பு, அரசுப்பணியில் எதிர்கொள்ளும் சவால்கள், உயிர்காக்கும் பணி போன்றவற்றை கருத்தில் கொண்டு தான், கலைஞர் அரசாணை 354 மூலம் 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு கிடைத்திட வழி வகை செய்தார்.

இருப்பினும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக  அதிமுக ஆட்சியில் அந்த அரசாணையின் பலன்கள் அரசு மருத்துவர்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. சமூக நீதியை காப்பதில் நம் முதல்வர் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளார்.  11 வருடங்களாக இங்கே கிடப்பில் போடப்பட்டுள்ள கலைஞரின் அரசாணைக்கு உயிர் கொடுக்க வேண்டி நாங்கள் விடுக்கும் இந்த வேண்டுகோளை ஏற்று,  தமிழக முதல்வர் உடனே உத்தரவிடுவார் என நம்புகிறோம்.

Related Stories: