கொடுங்கையூரில் துணிகரம் மெக்கானிக்கை கத்தியால் குத்தி பணம் பறிப்பு: ஆட்டோ கும்பலுக்கு போலீஸ் வலை

பெரம்பூர்: தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(30). இவர் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தனக்கு தெரிந்த நபரிடம் குடும்ப செலவுக்காக ரூ.18,000த்தை வாங்கிக்கொண்டு எம்.கே.பி.நகர் பஸ் நிறுத்தத்திலிருந்து வீட்டிற்கு செல்ல பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் `ஆட்டோ தண்டையார்பேட்டை தான் செல்கிறது’ என்று கூறி மணிகண்டனையும் ஏற்றி உள்ளனர்.

ஆட்டோ கொடுங்கையூர் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை குப்பை மேடு எழில்நகர் அருகே சென்றபோது 4 பேரில் ஒருவர் தான் வைத்திருந்த கத்தியால் மணிகண்டனின் வயிறு மற்றும் தொடைப்பகுதியில் ஓங்கிக் குத்தி விட்டு அவரிடம் இருந்த ரூ.18த்தை பறித்துக்கொண்டு ஆட்டோவில் இருந்து மணிகண்டனை கீழே தள்ளிவிட்டு சென்றனர். அவ்வழியாக வந்த சிலர் மணிகண்டனிடம் நடந்ததை விசாரித்து மணிகண்டன் மனைவி உமா மகேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த உமா மகேஸ்வரி தனது கணவர் மணிகண்டனை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தார். புகாரின்பேரில் கொடுங்கையூர் போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். காயம் அடைந்த மணிகண்டன் தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

Related Stories: