மாணவனை தாக்கிய சிறுவன் உள்பட 4 பேர் கைது

துரைப்பாக்கம்: ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்தவர் திலீப் சாய்(23). இவர் சோழிங்கநல்லூர் பகுதியில்  வாடகை வீட்டில் தங்கி, செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இவர் தனது நண்பர்களுடன் செம்மஞ்சேரி பழத்தோட்ட சாலையில் உள்ள காலி மைதானத்தில் மது அருந்தினார். அப்போது அதேபகுதியைச் சேர்ந்த சஞ்சய்(20) லோகேஷ், ரவி(20), தினேஷ்(28) ஆகியோரும் மது அருந்தினர். அப்போது இரு தரப்பினரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த திலீப் சாய் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து பீர் பாட்டிலால் சஞ்சயை சரமாரியாக தாக்கினர்.

இதில், படுகாயமடைந்த அவரை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது நண்பர்கள் சேர்த்தனர். பின்னர், சிகிச்சை பெற்று திரும்பிய அவர் தனது நண்பர்கள் லோகு, தினேஷ் ஆகியோருடன் சேர்ந்து நேற்று முன்தினம் கல்லூரி அருகே நின்றிருந்த திலீப்பை சாயை முட்புதர் பகுதிக்கு அழைத்துச்சென்று சரமாரியாக அடித்து, உதைத்தார். இதில், படுகாயம் அடைந்த அவரை நண்பர்கள் மீட்டு அங்குள்ள தனியார்  மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து, செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் திலீப் சாய் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செம்மஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சஞ்சய்(20), தினேஷ்(28), ரவி மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: