கடன் தொல்லையால் சலூன் கடையில் கஞ்சா விற்பனை: உரிமையாளர் கைது

பெரம்பூர்: கடன் தொல்லையால் சலூன் கடையில் கஞ்சா விற்பனை செய்த கடையின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள கடையில் கஞ்சா விற்று வருவதாக செம்பியம் இன்ஸ்பெக்டர் அய்யப்பனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் மாலை தனிப்படை போலீசார் பேப்பர் மில்ஸ் ரோடு, வேணுகோபால் தெரு பகுதியில் உள்ள சலூன் கடையில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி 5வது தெரு பகுதியை சேர்ந்த பாபு(27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பாபு சலூன் கடை வைத்து நடத்தி வருவதாகவும், 10 நாட்களுக்கு ஒருமுறை ஆந்திரா மாநிலத்தில் உள்ள கூடூருக்கு சென்று கஞ்சா பொட்டலங்களை மொத்தமாக வாங்கி அதனை சிறுசிறு பொட்டலங்களாக பிரித்து தனது சலூன் கடையில் வைத்து தெரிந்த பழக்கமுள்ள நபர்களுக்கு மட்டும் கஞ்சா பொட்டலங்களை விற்று வந்தது தெரியவந்தது. சலூன் கடை நடத்தியதில் அதிகமாக கடன் ஏற்பட்டதால் கடந்த இரண்டு மாதங்களாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து பாபுவின் கடையில் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா, செல்போன், எடை மிஷின் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பாபு மீது வழக்கு பதிவு செய்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: