ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த விஷயங்களை பாருங்கள் ஓபிஎஸ் துரோகத்தின் அடையாளம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு

சென்னை:  துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக பேசினார். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை கழகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று அளித்த பேட்டி: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்களின் பதவி காலாவதியாகி விட்டது. இந்த சூழ்நிலையில் கட்சியை வழிநடத்துவதற்கு, ஏற்கனவே உள்ள சட்ட திட்ட விதிகளின்படி எடப்பாடியை, அதாவது தலைமை நிலைய செயலாளரை, தலைமைக்கழக நிர்வாகிகள் அனைவரும், கேட்டுக்கொண்டதற்கிணங்க அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பெரும்பான்மையான அதாவது கிட்டதட்ட 74 நிர்வாகிகள் உள்ள சூழ்நிலையில், தற்போது 65 தலைமைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 4 பேர் இந்த கூட்டத்திற்கு வர இயலவில்லை என்று கடிதம் அளித்துள்ளனர்.

பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு உடல்நிலை சரியில்லை. சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன் தான் மருத்துவமனை சென்றுள்ளதாக தகவல் தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளார். அமைப்புச் செயலாளர் புத்திசந்திரன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வர இயவில்லை என்று கடிதம் கொடுத்துள்ளார். சிறுபான்மை பிரிவு தலைவர் ஜஸ்டீஸ் செல்வராஜ் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். எனவே 5 பேர் மட்டுமே கூட்டத்திற்கு வரவில்லை. மீதி 65 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பது, வருகிற 11ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் கூட்ட அழைப்பிதழ் தபாலில் அனுப்பவேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் ரகசியமாக வைக்கப்பட வேண்டியது. கூட்டத்தில் பல கருத்துகள் பேசப்பட்டது. அவை அறிவிப்புகளாக வருகிறதா இல்லையா என்பது குறித்து கட்சிதான் முடிவு செய்யும்.

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கிட்டதட்ட 51 நிமிடம் அதிமுகவின் சட்ட விதிகளை  தெளிவாக எடுத்து கூறியுள்ளார். அதாவது ஒருங்கிணைப்பாளர்கள் இல்லாத சூழ்நிலையில் கட்சியை வழிநடத்துவதற்கு தலைமை கழக நிர்வாகிகள் அதிகாரம் படைத்தவர்கள். அந்த அடிப்படையில் தான் தலைமைக்கழக நிர்வாகிகள், தலைமை நிலைய செயலாளராக எடப்பாடியார் இருக்கின்ற நிலையிலே, நாங்கள் அனைவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்த கூட்டம் நடந்தது. இந்த அடிப்படை விதியே ஓபிஎஸ்க்கு தெரியவில்லை என்றால் நான் என்ன சொல்வது. தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றாரா. தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குவதுபோல பாசாங்கு செய்பவர்களை எழுப்ப முடியாது.

ஒரு துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் என்று தான் சொல்லவேண்டும். அவர் ஆரம்ப கால கட்டத்திலிருந்து, தான் சார்ந்திருக்கின்ற இயக்கத்திற்குச் எந்த அளவிற்கு துரோகம் செய்தார் என்பதை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். அந்த அளவுக்கு துரோகம் என்பதே அவரின் உடன்பிறந்த ஒன்று. அப்படிப்பட்ட  நிலையில் எப்படி நமது அம்மா நாளிதழில் ஒரு அங்கமாக எப்படி வைத்துக்கொள்ள முடியும். அதனால் வைத்துக் கொள்ளவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடர்ச்சியாக நடந்த விஷயங்களைப் பாருங்கள். இது பற்றி நிறைய உதாரணங்களை எங்களால் சொல்ல முடியும். இன்றைக்கு அனைத்தும் ஒற்றைத் தலைமை முடிவுதான். அந்த ஒற்றைத் தலைமைக்கு எடப்பாடிதான் என்பது ஒட்டுமொத்த கட்சியின் நிலை. இவ்வாறு  அவர் கூறினார்.

Related Stories: